காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் அத்திவரதரை தரிசிக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். விடுமுறை நாளான நேற்று சனிக்கிழமையில் 2.50 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். அத்திவரதரை தரிசிக்க பக்தர்களுக்கு இரவு 10.00 மணி வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று பக்தர்கள் அதிக அளவில் குவிந்ததால், இரவு 01.00 மணி வரை பக்தர்கள் தரிசனம் மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் அனுமதியளித்தது.
இந்நிலையில் காஞ்சிபுரம் அத்திவரதர் உற்சவத்தின் 14-ம் நாளான இன்று விடுமுறை தினம் என்பதால் அதிகாலை முதலே அத்திவரதரை சந்திக்க அதிக அளவில் பக்தர்கள் குவிந்து வருகின்றன. 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் காஞ்சிபுரம் அத்திவரதர் உற்சவம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. உற்சவத்தின் 13-ம் நாளான நேற்று, பச்சை பட்டு உடுத்தி, மலர் மாலை அலங்காரத்துடன், பக்தர்களுக்கு பெருமாள் அருள் பாலித்தார். இந்த நிலையில் நேற்றைய தினம் போலவே, பக்தர்கள் கூட்டம் இன்றும் நிரம்பி வழிகிறது. காலை 5.30 மணி முதலே நீல நிற பட்டாடையுடன் அத்திவரதர் காட்சியளிக்கிறார்.
இன்றும் விடுமுறை தினம் என்பதால், லட்சக்கணக்கில் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2500- க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 13 நாட்களில் 15 லட்சம் பக்தர்கள் அத்திவரதரை தரிசித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதிலும் உள்ள மாநில அமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள் காஞ்சிபுரம் வருகை தந்து அத்திவரதரை தரிசனம் செய்து வருகின்றன. சமீபத்தில் இந்திய குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் அத்திவரதரை தரிசனம் மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து கேரள மாநில ஆளுநர் சதாசிவம் இன்று அத்திவரதரை தரிசனம் செய்கிறார்.