Skip to main content

மனைவியை கொடூரமாகக் கொன்ற கணவன்! 

Published on 03/11/2023 | Edited on 03/11/2023

 

wife passes away police arrested her husband

 

செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அருகே ஆயபக்கம் கிராமம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (30). அதே செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அருகே சிறுதாவூர் பகுதியைச் சேர்ந்தவர் அனிதா (28). இருவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு  திருமணம் நடந்து ஒரு குழந்தை உள்ளது. வெங்கடேசனுக்கு சொந்த ஊரில் போதிய வேலை வருமானம் இல்லாததால் திருப்போரூர் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி சென்ட்ரிங் மற்றும் கார்பெண்டர் வேலை செய்து வந்துள்ளார்.

 

வெங்கடேசனுக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளதாகவும், அதன் காரணமாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு வரும் என்றும் அவர்கள் வீட்டின் அருகே வசிப்பவர்கள் கூறுகிறார்கள். அதுபோலவே கடந்த ஞாயிற்றுக்கிழமையும் அவர் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் சமைக்கவில்லையா எனக் கேட்டு தகராறு செய்துள்ளார். வாக்குவாதம் அதிகமான நிலையில், மனைவியின் தலை முடியை பிடித்து தாக்கியுள்ளார். பிறகு இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. பின்னர் ஆத்திரமடைந்த வெங்கடேசன், தான் மறைத்து வைத்திருந்த பேனா கத்தியை எடுத்து தனது மனைவி அனிதாவின் கழுத்தில் குத்தியுள்ளார். அவரிடம் இருந்து தப்பிய அனிதா வீட்டைவிட்டு வெளியே வந்துள்ளார். அப்போது அதிகளவில் ரத்தம் வெளியேறியதின் காரணமாக வீட்டின் வெளியே சாலையில் மயங்கி விழுந்துள்ளார். அவர் விழுந்த இடத்தில் ரத்தம் வெள்ளம் போல் இருந்தது. 

 

wife passes away police arrested her husband

 

இதனைக் கண்ட வெங்கடேசன் அருகே இருந்தவர்கள் உதவியுடன் மனைவியை திருப்போரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அரசு மருத்துவமனையில் வெங்கடேசனிடம் மருத்துவர்கள் விசாரணை மேற்கொண்டதில், வெங்கடேசன் கழுத்தில் குத்தியது தெரியவந்துள்ளது. இது குறித்து காவல் நிலையத்திற்கு மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. 

 

அந்தத் தகவலைத் தொடர்ந்து திருப்போரூர் போலீசார் மருத்துவமனைக்குச் சென்று அனிதாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின் வெங்கடேசனை கைது செய்த போலீசார், அவரிடம் சம்பவம் தொடர்பாக  விசாரணை மேற்கொண்டு கொலை தொடர்பான காரணம் குறித்து வாக்குமூலம் கேட்டறிந்தனர். இதனை அடுத்து வெங்கடேசன் திருக்கழுக்குன்றம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

 

 

சார்ந்த செய்திகள்