மதுராந்தகத்தில் பாசஞ்சர் ரயில் தாமதமாக வந்ததால் ரயிலை மறித்து பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் அடிக்கடி பாசஞ்சர் ரயில் தாமதமாக வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் இன்று காலை 6:40 மணிக்கு வர வேண்டிய தாம்பரம் வரை செல்லும் பாசஞ்சர் ரயில் 7 மணிக்கு மேல் வந்ததால் ரயிலுக்காக காத்திருந்த பயணிகள் கடும் அவதியுற்றனர். இதனால் தாமதமாக வந்த ரயிலை மறித்த பயணிகள், 'இன்று ஒரு நாள் மட்டும் அல்ல இதே பிரச்சனைதான் தினமும் இருக்கிறது. இதனால் வேலைக்கு செல்பவர்கள் மிகுந்த இடையூறுக்கு ஆளாகிறோம்' என ரயில்வே ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பலமுறை ரயில்வே நிர்வாகத்திற்கு பாசஞ்சர் ரயில் தாமதமாக வருவது குறித்து புகார் அளித்தும் கண்டு கொள்ளவில்லை எனவும் குற்றச்சாட்டை முன்வைத்தனர். ரயில்வே தரப்பில் பனிமூட்டம் மற்றும் அதிகமான பயணிகள் பயணிப்பதால் இந்த தாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இந்த ரயிலில் கூடுதல் பெட்டிகளை இணைத்து பயணம் மேற்கொள்ளலாம் உள்ளிட்ட கோரிக்கைகளை ஏற்கனவே வைத்த ரயில் பயணிகள், ரயில்வே ஊழியர்கள் கண்டுகொள்ளாததால் இன்று போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.