2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் களத்தைச் சந்திப்போம் என நடிகர் ரஜினிகாந்த் அறிவித்தார். 2020ஆம் ஆண்டு இறுதியில் அரசியல் கட்சி தொடங்கவுள்ளேன் என அறிவித்தார். சில வாரங்களில் கொரோனாவைக் காரணம் காட்டி நான் அரசியலில் ஈடுபடவில்லை, ரஜினி மக்கள் மன்றமும் இனி அரசியல் நடவடிக்கையில் ஈடுபடாது, எப்போதும் சேவை மன்றமாகவே தொடரும் எனச் சொல்லி முற்றுப்புள்ளி வைத்தார்.
தமிழகம் தாண்டி ரஜினியின் திரைப்படத்தை, அவரின் ஸ்டைலை ரசிக்கும் ரசிகர்கள் கோடிக்கணக்கில் உள்ளனர். அதேநேரத்தில் தமிழகத்தில் ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள் என சுமார் 40 லட்சம் பேர் இருப்பதாக ரஜினி மக்கள் மன்றத்தினர் கூறுகின்றனர். இவர்களில் 5 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் வேறு கட்சிக்குப் போனாலும், 80 சதவீதத்துக்கும் மேலானவர்கள் ரஜினி மன்றத்திலேயே உள்ளனர் என்கிறார்கள். இந்த வாக்குகள் யாருக்கு என்கிற கேள்வி எழுந்துள்ளது. ஒவ்வொரு தேர்தலிலும் ரஜினி மறைமுகமாக தனது வாக்கு யாருக்கு என்பதை தேர்தலுக்கு முன்பே சூசகமாக மறைமுகமாக அறிவிப்பார் அல்லது வாக்களித்துவிட்டு வரும்போது நேரடியாக சைகை மூலமாக காட்டியதும் உண்டு.
இந்நிலையில் நடைபெறவுள்ள இந்த தேர்தலில் தலைவர் யாருக்கு ஆதரவு தரப்போகிறார் என்கிற கேள்வி ரஜினி மக்கள் மன்றத்தினரிடையே எழுந்துள்ளது. அரசியல் இனி இல்லை என அவர் அறிவித்தாலும், மன்றத்தினர் விடுவதாக இல்லை. அதற்கு காரணம், அரசியல் கட்சி வேட்பாளர்களின் நெருக்கடி. ரஜினி ரசிகர் மன்றத்தின் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் லட்சத்துக்கு மேற்பட்ட நிர்வாகிகள், ரசிகர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். குறிப்பாக சோளிங்கர், வேலூர், குடியாத்தம், கே.வி.குப்பம், வாணியம்பாடி, திருப்பத்தூர் தொகுதிகளில் கணிசமாக உள்ளனர். சோளிங்கர் தொகுதியில் 300 பூத்களுக்குத் தலா 30 பேர் என சுமார் 9 ஆயிரம் பூத் கமிட்டியினர் ரஜினி மக்கள் மன்றத்தினர் உள்ளனர்.
ரஜினி அரசியலுக்கு வரவில்லை என்று சொன்ன பின்பும், இந்த அமைப்பு கலையாமல் அப்படியே உள்ளது. இதேபோல் மாவட்டத்தில் உள்ள மற்ற 12 தொகுதிகளிலும் உள்ளன. இதனை அறிந்துள்ள பிரதான கட்சிகளான திமுக, அதிமுக, பாமக, அமமுக போன்ற கட்சிகளும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை நேரில் சந்திக்க தொடங்கியுள்ளனர்.
சோளிங்கர் தொகுதியில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர் காங்கிரஸ் முனிரத்தினம், அமமுக வேட்பாளர் பார்த்திபன் போன்றோர் ஒருங்கிணைந்த வேலூர் ரஜினி மக்கள் மன்ற மா.செ சோளிங்கர் ரவியை சந்தித்து, சால்வை அணிவித்து, ஆதரவு கேட்டுள்ளனர். இதேபோல் மற்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களும் ஆதரவு கேட்டு ரவி மற்றும் அந்தந்த பகுதி நிர்வாகிகளை அணுகியுள்ளனர். “தலைவர் சொல்லாம நாங்க எந்த முடிவும் எடுக்க முடியாதே” என சமாளித்து அனுப்பியுள்ளார்கள். இப்படி வேலூர் மாவட்டம் மட்டும்மில்லாமல் திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, விழுப்புரம், புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சை என பல மாவட்டங்களிலும் ரஜினி மக்கள் மன்ற மா.செக்களை அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் சந்தித்து, ஆதரவு கேட்டு வருகின்றனர் என்கிறார்கள் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்.