Skip to main content

இந்தியன் பட பாணியில் லஞ்சம் கேட்கும் தாம்பரம் தாசில்தார்!- சிக்கும் 'பேப்பர்ஸ்' பாக்யலட்சுமி!

Published on 20/05/2019 | Edited on 20/05/2019

அரசு ஊழியர்களும் லஞ்ச ஊழலும் ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகள். பிரிக்கவே முடியாது என்றாலும் ஊழியர் லஞ்சம் வாங்கும்போது புகார் கொடுத்தால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றாலும் குறைந்தபட்சம் கண்டிப்பார்கள். ஆனால், பொதுமக்களிடம் லஞ்சம் கேட்கும் தாலுக்கா அலுவலக ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்து குற்றத்தைத் தடுக்கவேண்டிய தாசில்தாரே லஞ்சம் வாங்கச் சொல்லி டார்ச்சர் கொடுப்பதாக பகீர் குற்றச்சாட்டு கிளம்பியுள்ளது. குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருப்பவர் தாம்பரம் தாசில்தார் பாக்கியலட்சுமி.

 

bribe



இதுகுறித்து நாம் மேலும் விசாரித்தபோது, “தாம்பரம் தாசில்தார் ஆஃபிசில் இரண்டு இடத்திற்கு பட்டா அப்ளை பண்ணியிருந்தேன். சர்வேயருக்கு பதிலா புரோக்கர்களே ஸ்பாட்டுக்கு வந்தாங்க. இடத்தைப் பார்வையிட்டுவிட்டு ஒரு பட்டாவுக்கு 10,000 ரூபாய். இரண்டு பட்டாக்களுக்கு 20,000 ரூபாய் தரணும்னு பேரம் பேசினார்கள். அவ்வளவுத்தொகை கொடுக்கமுடியாது. அதுவும், லஞ்சம் கொடுத்துதான் பட்டா வாங்கவேண்டும் என்று அவசியமில்லைன்னு சொல்லி அனுப்பிட்டேன்.

 

 



அதிலேர்ந்து, வயதான சூழலிலும் பலமுறை தாம்பரம் தாசில்தார் அலுவலகத்துக்கு அலைந்து திரிந்தேன். ஆனாலும் யாருமே கண்டுக்கல. மூன்றுமாதங்களுக்குப்பிறகு, சர்வேயர்களிடம் கேட்டால் ‘எங்க வேலையெல்லாம் எல்லாம் முடிச்சு ஃபைல் தாசில்தார் டேபிளுக்கு போயிடுச்சு. நீங்க அவங்கக்கிட்டத்தான் பேசணும்’னு சொல்லிட்டாங்க. ஆனா, தேர்தல் நேரம்ங்குறதால தாசில்தார்கள் மாறிக்கிட்டே இருந்தாங்க. ஒருகட்டத்துல பாக்கியலட்சுமின்னு ஒரு தாசில்தார் வந்தாங்க. அவங்கக்கிட்ட முறையிட்டா எனக்கு நியாயம் கிடைக்கும்னு பார்த்தா முன்னாடி இருந்த தாசில்தார்களைவிட பாக்கியலட்சுமி மிகப்பெரிய லஞ்சப்பேர்வழின்னு அப்புறம்தான் தெரியவந்தது.

 

bribe



என்னைமாதிரி லஞ்சம் கொடுக்காதவங்க ஏகப்பட்ட பேர் தாம்பரம் தாசில்தார் ஆஃபிஸுல நாயா அலைஞ்சுக்கிட்டிருக்காங்க. தாசில்தார் அலுவலகத்துக்குள்ள லஞ்சம் கேட்குறவங்கமேல நடவடிக்கை எடுக்கவேண்டிய அதிகாரியே இப்படி நடந்துக்கிட்டா நாங்க யார்க்கிட்ட போறது? காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மனுக்கொடுத்து போராடாலாம்னு இருக்கோம்” என்று குமுறிவெடிக்கிறார்.

 



தாம்பரம் தாசில்தார் பாக்கியலட்சுமியை தொடர்புகொண்டு பாதிக்கப்பட்டவரின் உறவினரைப்போல நாம் பேசியபோது, “நீங்க எதுக்கு ஃபோன் பன்றீங்க? எல்லாத்துக்கும்  ‘பேப்பர்ஸ்’ எடுத்துக்கிட்டு சர்வேயர்கள் என்னைப்பார்க்க வர்றாங்கல்ல. அதேமாதிரி, இந்த ஃபைலுக்கும் ‘பேப்பர்ஸ்’ எடுத்துக்கிட்டு என்னைய வந்து பார்க்கச்சொல்லுங்க. ஏன், ‘பேப்பர்ஸ்’ எடுத்துக்கிட்டு வந்து பார்க்கமாட்டேங்குறாங்க?  ‘பேப்பர்ஸ்’ எடுத்துட்டு வந்து பார்க்கச்சொல்லுங்க. ஓ.கே. ஆகிடும்” என்று வார்த்தைக்கு வார்த்தை ‘பேப்பர்ஸ்… பேப்பர்ஸ்’ என்று அழுத்தம் கொடுத்து சொன்னார்.

 

 

when gave bribe then only file move... allegation to  dashildar peppers pakyalalaxmi



‘பேப்பர்ஸ்’க்கான அர்த்தம் நமக்கு புரிந்தாலும் தாம்பரம் தாசில்தார் அலுவலக பணியாளர்களிடம் இதுகுறித்து நாம் பேசியபோது, “சார்… பேப்பர்ஸ்… பேப்பர்ஸுன்னு கேட்குறாங்களே இன்னுமா புரியல? லஞ்சப்பணத்தைத்தான் அப்படி கேட்குறாங்க. ஷங்கரின் இயக்கத்தில் கமல் நடித்த இந்தியன் படத்துல அரசு அதிகாரியான செந்தில் லஞ்சத்துக்கு பதிலா முக்கியமான பேப்பர் வரல’ன்னு கேட்பாரே… அந்தமாதிரிதான் லஞ்ச வாங்குறதுக்கு தாசில்தார் பாக்கியலட்சுமியின் கோர்டு வேர்டு பேப்பர்ஸ். எதுக்கெடுத்தாலும் பேப்பர்ஸ் பேப்பர்ஸுன்னு பேயா அலையுறாங்க. ஏற்கனவே, பூந்தமல்லி தாசில்தாரா இருந்திருக்காங்க. அங்க விசாரிச்சா… அவங்க பேரே  ‘பேப்பர்ஸ் பாக்கியலட்சுமி’ன்னுதான் கிண்டலடிக்கிறாங்க. எல்லார்க்கிட்டேயும் லஞ்சம் கேட்கிறதில்ல.

 

 

 


லஞ்சம் கொடுக்கவே முடியாதுன்னு உறுதியா இருக்கிறவங்கக்கிட்ட ரொம்ப ஃபோர்ஸ் பன்றதில்ல. ஏன்னா, தாம்பரம் தாசில்தார் ஆஃபிஸுல ஏற்கனவே லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்தி ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்திச்சோம். லஞ்சம் வாங்கின ஃபைலுக்கான பங்கை தாசில்தார் பாக்கியலட்சுமிக்கு கரெக்ட்டா கொடுத்துடுவோம். ஆனா, வாங்காத ஃபைல்களுக்கும் லஞ்சத்தை எப்படியாவது வாங்கிக்கொடுங்கன்னு எங்களை ஃபோர்ஸ் பண்ணினா நாங்க என்னதான் பண்ணமுடியும்? எல்லா பேப்பரும் கரெக்டா இருக்கும்போது பேப்பர்ஸ் எடுத்துட்டு வான்னு கூப்ட்டா… எங்க சம்பளத்தையா எடுத்து கொடுக்கமுடியும்?  அதுவும், கொஞ்சம் கூட மரியாதை இல்லாம வாடா போடான்னு பேசிறது மட்டுமில்ல… சொர்ணாக்கா மாதிரி ரொம்ப கேவலாமா எல்லோரையும் திட்டுறாங்க. இந்த ஃபைலுக்கு லஞ்சம் வாங்கிக்கொடுக்காததால கையெழுத்தே போடாம வெச்சிருக்காங்க  தாசில்தார் ‘பேப்பர்ஸ்’ பாக்கியலட்சுமி” என்று உண்மையை போட்டுடைக்கிறார்கள். அவர்களின் வாக்குமூலம் ஆதாரப்பூர்வமாக இருந்தாலும் அவர்களின் நலன் கருதி பெயர்கள் மறைக்கப்பட்டுள்ளன.

 

 

bribe



இதுகுறித்து, ‘பேப்பர்ஸ்’ தாசில்தார் என்று குற்றஞ்சாட்டப்படும் தாம்பரம் தாசில்தார் பாக்கியலட்சுமியை நாம் தொடர்புகொண்டு கேட்டபோது, விளக்கமளிக்க மறுத்துவிட்டார். அவர், இது தொடர்பாக முறையான விளக்கமளித்தால் அதை நக்கீரனில் பிரசுரிக்க தயாராக இருக்கிறோம்.

 

 



பாதிக்கப்பட்டவரின் புகார் மற்றும் தாம்பரம் தாசில்தார் அலுவலக பணியாளர்களின் குற்றச்சாட்டுக்கள் குறித்து காஞ்சிபுரம் டி.ஆர்.ஓ. (மாவட்ட வருவாய் அலுவலர்) சுந்தரமூர்த்தி மற்றும் மாவட்ட ஆட்சியர் பொன்னய்யா ஆகியோரின் கவனத்துக்கு கொண்டுசென்றபோது, “விசாரித்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்கிறோம்” என்றார்கள்.

 

​  collector



தாம்பரம் தாசில்தார் அலுவலகத்தில் பட்டா விண்ணப்பத்திற்கே இவ்வளவு லஞ்சம் என்றால், இன்னும் எதற்கெல்லாம் எவ்வளவு லஞ்சம் வாங்குகிறார்களோ… ம்ஹூம்  ‘பேப்பர்ஸ்’ வாங்குகிறார்களோ? இதுபோன்ற, அதிகாரிகள் மீது முறையான நடவடிக்கை எடுக்காதவரை அரசு அலுவலகத்தில் லஞ்சவேட்டை தொடர்ந்துகொண்டுதான் இருக்கும். அப்பாவி ஏழை எளிய மக்கள் பாதிப்படைந்துகொண்டுதான் இருப்பார்கள்.

 

 

 

 


 

சார்ந்த செய்திகள்