குற்றால அருவியில் நீர் செல்லும் சித்ராநதி ஆற்றுப்படுகை தூர்வாறும் பணிகள் துவக்கப்பட்டன.
அண்ணா பல்கலைக்கழகமும் நெல்லை மாவட்ட நிர்வாகமும் இணைந்து குற்றாலத்தில் மெயின் அருவியில் இருந்து விழும் தண்ணீர் செல்லும் ஆற்றுப்பகுதியை முற்றிலும் சீரமைக்கும் பணி நேற்று தொடங்கியது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகம் தமிழகத்தின் பிரதான பகுதிகளில் உள்ள நீர்நிலைகளை தூர்வாரி விவசாயத்திற்கு முழுமையாகப் பயன்படுத்தும் நடவடிக்கைகளில் கடந்த சில ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு அங்கமாக நெல்லை மாவட்டத்தில் புகழ் பெற்ற நதியான தாமிரபரணி நதியை சீரமைக்கும் பணி. நெல்லை மாவட்டத்தின் பெரிய குளங்களில் ஒன்றான மானூர் பெரிய குளம் உள்ளிட்ட பல குளங்கள் தூர் வாரப்பட்டு அங்கு அதிக அளவில் தண்ணீர் தேக்கி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
குற்றாலத்தில் மெயின் அருவியில் இருந்து விழும் தண்ணீர் செல்லும் ஆற்று பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக புதர்கள் மண்டியும் குப்பை கூழங்கள் நிறைந்தும் மண் திட்டுக்களும் நிறைந்தும் காணப்படுகிறது. இதன்மூலம் இங்கிருந்து தென்காசி சிற்றாறு செல்லும் பாதை அடைபட்டு தண்ணீர் வீணாகிக் கொண்டிருந்தது.
இந்த ஆற்று பகுதியை நெல்லை மாவட்ட நிர்வாகமும் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் நம் தாமிரபரணி என்ற அமைப்பும் சேர்ந்து சீரமைக்க முடிவு செய்தன. பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் இந்த பணியில் கை கோர்க்க திட்டமிட்டுள்ளது.
இதற்கான முதல் கட்ட பணிகள் குற்றாலத்தில் இன்று தொடங்கியது . நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் பணிகளை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட திட்ட அலுவலர் பழனி, அண்ணா பல்கலைக்கழக துணை இயக்குனர் டாக்டர் சக்தி நாதன், நம் தாமிரபரணி அமைப்பு நிர்வாகிகள் சாமி,.நல்ல பெருமாள், வித்யாசாகர், முகமது இப்ராஹிம், கணபதி பாலசுப்ரமணியன், தென்காசி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர். வேங்கடரமணா, தென்காசி கோட்டாட்சியர் சுந்தர்ராஜ், வட்டாட்சியர் சண்முகம், சிற்றாறு வடி நிலக்கோட்ட செயற்பொறியாளர் ஜெயபால், நம் தாமிரபரணி அமைப்பு நிர்வாகிகள் மற்றும் பல்வேறு சமூக நல அமைப்பை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
குற்றாலத்தில் அடுத்த மாதம் சீசன் துவங்குவதற்கு ஏற்ற சூழ்நிலை உள்ள நிலையில் தற்போது அருவிகளில் தண்ணீர் வராததால் அந்த சூழ்நிலையை பயன்படுத்தி ஆற்றின் வழிப்பாதையை முற்றிலும் சீரமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணிகள் இரு வாரங்களில் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இப்பணிகளின் பயனாய் மாவட்டத்தின் பெரியகுளங்களைக் கொண்ட மானூர் பகுதி குளங்கள் நீர் வளம் பெறும். விவசாயம் பயனடையும் என்பது கவனிக்கப்படத்தக்கது.