
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் முத்துக்காடு ஊராட்சி வேங்கைவயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை குடிநீர்த் தேக்கத் தொட்டியில் கடந்த 2022 டிசம்பர் 26ஆம் தேதி மனித கழிவு மிதந்தது என்று உள்ளூர் இளைஞர்களால் கண்டெடுக்கப்பட்டது. இதனையடுத்து மனித கழிவு கலந்த சமூகவிரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகளும் முத்துக்காடு ஊராட்சியைச் சேர்ந்த வேங்கைவயல், இறையூர் கிராம மக்களும் தொடர் போராட்டங்கள் செய்தனர். இறையூர் மக்கள் நாடாளுமன்றத் தேர்தலையும் புறக்கணித்தனர்.
முதலில் தனிப்படை போலீசாரும் பிறகு சிபிசிஐடி போலீசாரும் என சுமார் 750 நாட்களுக்கு மேல் விசாரணை செய்து அறிவியல் பூர்வமான ஆதாரங்களையும் சேகரித்து கடந்த ஜனவரி 24ஆம் தேதி சிபிசிஐடி போலீசார் புதுக்கோட்டை எஸ்சி எஸ்டி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். அதில் வேங்வையல் கிராமத்தைச் சேர்ந்த காவலர் முரளிராஜா, முத்துக்கிருஷ்ணன், சதர்சன் ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. அதனால் வழக்கை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்று சிபிசிஐடி போலீசார் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். ஆனால் எதிர்த் தரப்பில் குற்றப்பத்திரிக்கையை ஏற்கக் கூடாது என்று வாதிட்டனர். ஆனால் ஆதாரங்கள் அடிப்படையில் வழக்கு குற்றவியல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள தலைமறைவாக உள்ள 3 பேரையும் மார்ச் 11ஆம் தேதி ஆஜர்படுத்த உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் தலைமறைவாக இருந்த 3 பேர் வீட்டிற்கும் சம்மன் வழங்கப்பட்டது. இந்த நிலையில் இன்று (11.03.2025) காலை 10 மணிக்கு நீதிமன்றத்தில் சரணடைந்தனர். சரணடைந்த எங்களுக்குப் பிணை வேண்டும் என்று வழக்கறிஞர்கள் மூலம் பிணை மனுத் தாக்கல் செய்தனர். பிணை மனு மாலையில் விசாரணைக்கு வரும் வரை 3 பேரும் நீதிமன்றத்தில் காத்திருக்கச் செய்தனர். மாலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது பிணை மனு. அப்போது ஒவ்வொரு நபருக்கு 2 ஜாமின்தார்கள் மூலம் 3 பேருக்கும் 6 பேர் ஜாமின் கொடுத்துப் பிணை வழங்கப்பட்டது. மேலும் நாளை (12.03.2025 - புதன்கிழமை) வழக்கு விசாரணைக்கு வர உள்ளதால் நீதிமன்றத்தில் ஆஜராகவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் 30 நாட்களுக்கு மேல் பணிக்கு வராத காவலர் முரளி ராஜா வீட்டில் ஒட்டப்பட்ட விட்டோடி நோட்டிஸ்க்கு காவல் உயர் அதிகாரியிடம் முறையான பதில் தாக்கல் செய்து பணிக்குத் திரும்பலாம் என்று கூறப்படுகிறது.