
வந்தவாசியில் வீதி உலாவுக்கு பிறகு கொண்டுவரப்பட்ட கோவில் தேர் திடீரென நள்ளிரவில் தீ பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் ஜலகண்டேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமாக இரண்டு தேர்கள் உள்ளது. மாசி மாத பிரம்மோற்சவம் நிகழ்ச்சியை முன்னிட்டு நேற்று நகர்வல திருவிழா நடைபெற்றது. இரண்டு தேர்களையும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.
நகர்வலம் முடிந்த பின்னர் தேர்களை நிலைக்கு கொண்டு வந்தனர். இரண்டு தேர்களுக்கும் பூஜைகள் செய்யப்பட்டு அதற்கான கொட்டகையில் நிலை நிறுத்திவிட்டுப் பூட்டி சென்றனர். இந்நிலையில் நேற்று இரவு சுமார் 11.30 மணியளவில் திடீரென தேர்கள் நிலை நிறுத்தப்பட்டிருந்த கொட்டகையில் இருந்து புகை வருவதை அறிந்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அங்கு அவர்கள் வருவதற்குள் ஒரு தேரின் மேல்பகுதி முழுவதுமாக எரிந்து சேதமானது. கொட்டகையின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே சென்ற தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த சம்பவம் குறித்து வந்தவாசி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீதி உலாவிற்கு சென்று விட்டு நிலைக்கு திரும்பிய தேர் பற்றி எரிந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.