Skip to main content

''காந்தி கடைபிடித்த 11 விரதங்கள்...''-தமிழருவி மணியன் பேச்சு!!

Published on 31/01/2020 | Edited on 31/01/2020

ஈரோட்டில் தேசிய நல விழிப்புணர்வு இயக்கம் சார்பில் நேற்று இரவு நடைபெற்ற காந்தியக் கொள்கை கருத்தரங்கில் காந்தி மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் கலந்து கொண்டு பேசினார். தேசிய நல விழிப்புணர்வு இயக்க தலைவர் எஸ்.கே.எம் மயிலானந்தன் தலைமை வகித்தார். தமிழருவி மணியன் தனது பேச்சில்,

 

 'The 11 Fasting of Gandhi...' tamilaruvi maniyan speech


"தற்போது நுகர்வு என்பது வெறியாகிறது. இதை,‘சாத்தானின் கலாச்சாரம்’ என்றும், இம்மேற்கத்திய கலாசாரம் வீசினால், தனது ஆன்மாவை இந்தியா இழக்கும் என்றார் காந்தி. காந்தியை, காந்தியத்தை அறிய, அவர் எழுதிய சத்தியசோதனையை முழுமையாக படிக்காவிட்டாலும், முன்னுரையையாவது படியுங்கள். 1924 முதல் 1927 வரை அவரது நவஜீவன் இதழில் காந்தி, குஜராத்தியில் எழுதியதன் மொழி பெயர்ப்பு, சத்யசோதனையாகும்.

இந்நுாலில் அவரது முழு வாழ்க்கை வரலாற்றையும் அவர் எழுதவில்லை என்பதை அறிய வேண்டும். ஒருவன் தன் தாய் மொழியில் கல்வி பயின்றால் மட்டுமே, படைப்பாற்றல், கற்பனை வளம் பெரும் என உணர்ந்ததால், அவர் அத்தொகுப்பை குஜராத்தியில் எழுதி, ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். ஆனால், நம் தாய்மொழியில் கற்பதை நாமும், நமது பெற்றோரும் விரும்புவதில்லை. அதிலேயே நாம் காந்தியை கைவிட்டுவிட்டோம்.

ஒவ்வொன்றிலும் நாம் கந்தியையும், காந்தியத்தையும் இழந்து வருகிறோம். இதனால் ஜனநாயகம் அழியும் என்ற கலக்கம் கொஞ்சம் கூட இல்லாமல் போய்விட்டது. அத்துடன், இன்றைய நிலைக்கு காந்தி பொறுத்தமானவரா என வறட்டு தத்துவத்தை கூறுகின்றனர். தரக்குறைவாக விமர்சிக்கின்றனர். அவர்களுக்கு காந்தியை பற்றிய புரிதலை உருவாக்குவோம்.

 

 'The 11 Fasting of Gandhi...' tamilaruvi maniyan speech

 

காந்தியத்தை போதித்த காந்தி, நோபல் பரிசு பெறவில்லை. ஆனால், காந்தியையும், காந்தியத்தையும் கடைபிடித்த மார்ட்டின் லுாதர்கிங், தலாய்லாமா, நெல்சன் மண்டேலா, மியான்மாரில் ஆன் சாங்சுகி என பலரும் நோபல் பரிசு பெற்றுள்ளனர்.
காந்தியம் இன்றைக்கு பொறுத்தமானதா என எண்ணுபவர்கள், காந்தியை மறுவாசிப்பு செய்யுங்கள்.

‘பசித்தவனுக்கு உணவு வழங்குங்கள், நோயாளிக்கு மருந்து கொடுங்கள், அறிவற்றவனுக்கு கல்வி கொடுங்கள்’ என்றார் காந்தி. அதைத்தான் நபிகள் நாயகமும், ‘பசித்தனுக்கு உணவு கொடு, நோயாளியை தேடிச்செல், அடிமைகளை விடுதலை செய்’ என்றார். அதைத்தான் ஏசுவும், தனது ‘மலை பேச்சில்’ தெரிவித்துள்ளார்.

அதுபோல, காந்தி 11 விரதங்களை கடைபிடிக்க வலியுறுத்தினார். அவரும் அதை கடைபிடித்தார். அவர் கூறிய, சத்தியம், அகிம்சை, பிரம்மச்சரியம், திருடாமை, உடைமை இன்மை, உடல் உழைப்பு, நாவடக்கம், அஞ்சாமை, தீண்டாமை ஒழிப்பு, சமய நல்லிணக்கம், சுதேசி என்ற, 11 விரதங்களையும் கடைபிடிப்போம்.

காந்திய வாழ்வியலை பின்பற்ற வேண்டும் அது என்றும் தோல்வி அடையாது." என்றார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பணிக்காக ஈரோட்டில் இருந்த போலீசார் கேரளா பயணம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Police from Erode to Kerala for election duty

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி கேரள மாநிலத்தில் வரும் 26 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதற்கான பாதுகாப்புப் பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து போலீசார் கேரளா செல்லத் தொடங்கியுள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டத்திலிருந்த 100 போலீசார், தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக கேரளா மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயத்துக்கு இன்று கிளம்பிச் செல்கின்றனர். மேலும், வருகின்ற 26 ஆம் தேதி தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் ஈரோட்டுக்கு அவர்கள் வருவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

தாளவாடியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை ; வாழை மரங்கள் சேதம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப் பகுதியில் கடந்த சில மாதங்களாக கடும் வெயில் வாட்டி வந்தது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டது. குடிநீரை விலைக்கு வாங்கும் நிலைக்கு தாளவாடி மலைப்பகுதி மக்கள் தள்ளப்பட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை நேரங்களில் கடும் வெயில் வாட்டி வருவதும் மதியம் 3 மணிக்கு மேல் சூறைக் காற்றுடன் மிதமான மழையும் சில இடங்களில் பலத்த மழையும் பெய்து வருகிறது.

இந்தத் திடீர் சூறைக்காற்றால் வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்தனர். இந்தநிலையில் நேற்று மதியம் 3 மணியளவில் மேகமூட்டம் சேர்ந்து தூரல் மழையாக ஆரம்பித்தது. அப்போது தாளவாடி, கும்டாபுரம், பாரதிபுரம், ராமாபுரம், ஓசூர், தொட்டகாஜனூர், கரளவாடி ஆகிய பகுதிகளில் சூறைக்காற்றுடன் 15 நிமிடம் மிதமான மழை பெய்தது. சூறைக்காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் ராமாபுரம் கிராமத்தில் விவசாயி தீபு (35) என்பவரின் 700 நேந்திரம் வாழை, சுந்தரமூர்த்தி என்பவரின் 1000 வாழை, ராசு என்பவரின் 1000 வாழை, தொட்டகாஜனூர் சிவண்ணா என்பவரின்  1000 வாழை என 4 ஆயிரம் வாழைகள் முறிந்து நாசமானது. அதேபோல் தாளவாடியில் இருந்து ராமாபுரம் செல்லும் சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு சென்ற நெடுஞ்சாலைத் துறை மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.

மேலும், ராமாபுரம், பாரதிபுரம் கிராமத்தில் சூறைக்காற்றால் 6 மின்கம்பங்கள் முறிந்து சேதமடைந்தது. அதை சீர் செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல்வேறு இடங்களில் மின்தடையும் ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 20,000 க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் தாளவாடி மலைப்பகுதியில் சூறைக்காற்றுக்கு சேதம் அடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ஒருபுறம் மழை வந்ததால் சந்தோசம் இருந்த போதும், சூறைக்காற்றால் வாழை சேதம் அடைந்துள்ளதால் மலைப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தமிழக அரசு கள ஆய்வு மேற்கொண்டு சேதமடைந்த வாழைகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் கடந்த இரண்டு நாட்களாக மட்டும் ரூ. 20 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.