
நேற்று முன்தினம் (10/03/2025) நாடாளுமன்றத்தில் மொழிக் கொள்கை தொடர்பாக பரபரப்பான காரசார விவாதம் நடைபெற்றது. 'மாநில அரசுக்கு நிதி வழங்க மறுப்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது; புதிய கல்விக் கொள்கையை பின்பற்றாததால் தமிழகத்தை மத்திய அரசு பழிவாங்குகிறது' என திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இதற்கு பதிலளித்துப் பேசிய மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், ''தேசிய கல்விக் கொள்கை மூலம் இந்தி திணிக்கப்படுவதாக வைக்கப்படும் குற்றச்சாட்டு தவறானது. தேசிய கல்விக் கொள்கை விவகாரத்தில் மாணவர்களை திமுக தவறாக வழி நடத்துகிறது. தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்தை மாநில அரசு பாழடித்து வருகிறது. பிஎம்ஸ்ரீ திட்டத்தில் கையெழுத்திட வந்த தமிழ்நாடு கடைசி நேரத்தில் யூ-டர்ன் போட்டது. மொழியை வைத்து அரசியல் செய்கிறார்கள். இவர்கள் ஜனநாயகம் அற்றவர்கள், அநாகரீகமானவர்கள் (un democratic, uncivilized) என இருமுறை குறிப்பிட்டார். மேலும், ''சூப்பர் முதல்வரின் பேச்சைக் கேட்டு கையெழுத்திட மறுத்தனர். யார் அந்த சூப்பர் முதல்வர் என்பதை கனிமொழிதான் கூறவேண்டும். பாஜக ஆளாத மாநிலங்களிலும் புதிய கல்விக் கொள்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது'' என்றார்.
திமுக எம்பிக்கள் கண்டனம் தெரிவித்ததைத் தொடர்ந்து நாகரீகமற்றவர்கள் என்ற வார்த்தையை மத்திய அமைச்சர் திரும்பப் பெற்றார். பிரதானின் பேச்சுக்கு தமிழகத்தில் எதிர்ப்புகள் கிளம்பியது பல இடங்களில் அவரது உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து நேற்று நாடாளுமன்றத்திற்கு வந்திருந்த திமுக மற்றும் அதன் தோழமை கட்சி எம்பிக்கள் கருப்பு உடை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பரபரப்பு உரையாற்றினார். அவரது உரையில், ''4000 வருட பண்பாடு, கலாச்சாரம் எங்களுடையது. எங்களுக்கும் யாரும் சொல்லிக் கொடுக்க வேண்டாம் என்ற அர்த்தத்தில் அவர்கள் (திமுக எம்பிக்கள்) பேசுகிறார்கள். 4000 ஆண்டு நாகரிகம் இருக்கக்கூடிய அதே தமிழ்நாட்டில் இவர்களைச் சேர்ந்தவர்கள் மார்ச் 1989 சட்டசபையில் நாகரிகம், பெண்ணுரிமை, இலவச பஸ் பாஸ் கொடுத்து கொண்டு இருக்கிறோம் என சொன்னவர்கள் ஜெயலலிதா அம்மையாரின் புடவையை பிடித்து இழுத்தவர்கள் இவர்கள். இது உண்மை. அதை செய்தது யார் என அவர்களுடைய பெயரைக் குறிப்பிட விரும்பவில்லை. இது என்ன நாகரிகம்? இது என்ன பண்பாடு? இது என்ன கலாச்சாரம்? இதுதான் திராவிட மாடல் கலாச்சாரமா? இலவச பேருந்து கொடுத்தால் மட்டும் போதாது, பெண்களை அவமதிக்காமல் இருப்பது முக்கியம். அதை அவர்கள் பண்ணவில்லை.

அதேபோல் இரண்டாவது சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் டிசம்பர் 22ஆம் தேதி பாலியல் வன்கொடுமை நிகழ்ந்தது. இதில் தமிழக அரசின் நடவடிக்கை என்ன? அவரும் ஒரு பெண் தான். அதுவும் நாகரிகத்திற்கு எதிர்மறையான விஷயம். ஆனால் நீங்கள் யாருக்கு உபதேசம் பண்ணாதீர்கள் என்று சொல்கிறீர்கள். மூன்றாவது, ஒன்பது வயது குழந்தையை திருச்சியில் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள். அதில் நீங்கள் எடுத்த நடவடிக்கை என்ன? திமுக எம்பிக்கள் பதில் சொல்ல வேண்டும். நான்காவதாக 22 வயது பெண் கடந்த வருடம் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். திமுக அரசு ஆட்சியில் இது போன்ற பெண்களின் பாதுகாப்பு மோசமாக இருக்கிறது. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 60க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். அதற்கும் நடவடிக்கை எதுவும் இல்லை. தமிழ்நாட்டில் ஆணவக் கொலைகள் அதிகம். தமிழ் மொழியை காட்டுமிராண்டி மொழி என சொன்னவரைதான் உங்கள் ஓவ்வொரு அலுவலங்களிலும் வைத்து எங்கள் முன்னோடி என சொல்கிறீர்கள்'' என கடுமையாக விமர்சித்து பேசினார்.