
மகாராஷ்டிரா மாநிலத்தில், முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பா.ஜ.க - சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் அடங்கிய மகாயுதி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில், துணை முதல்வராகப் பொறுப்பு வகித்து வரும் ஏக்நாத் ஷிண்டேவுக்கு, தேவேந்திர பட்னாவிஸுக்கும் இடையே பதவி தொடர்பாக கருத்து வேறுபாடு உள்ளதாக அவ்வப்போது தகவல் பரவி வருகிறது. இந்த தகவல்களை உறுதிப்படுத்தும் விதமாக, மாநிலம் தொடர்பான முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் விடுத்த ஒவ்வொரு அழைப்புகளையும் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி ஏக்நாத் ஷிண்டே புறக்கணித்து வருகிறார்.
இதனிடையே, ஏக்நாத் ஷிண்டே முதல்வராக இருந்த போது, அவர் நியமித்த அதிகாரிகளை தேவேந்திர பட்னாவிஸ் நீக்கி வருகிறார். அதே போல், ஏக்நாத் ஷிண்டே தொடங்கி வைத்த ஜல்னா திட்டம் போன்ற திட்டங்களை தேவேந்திர பட்னாவிஸ் நிறுத்தி வைத்துள்ளார். இது ஏக்நாத் ஷிண்டேவுக்கு மேலும் எரிச்சலை கொடுத்தாகக் கூறப்பட்டது. இந்த சூழ்நிலையில் தான், தன்னை எளிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று தேவேந்திர பட்னாவிஸுக்கு ஏக்நாத் ஷிண்டே சில நாள்களுக்கு முன்பு மறைமுக எச்சரிக்கை விடுத்திருந்தார்.
மகாராஷ்டிராவின் மகாயுதி கூட்டணிக்குள் கருத்து வேறுபாடு இருப்பதாக வெளியாகும் தகவலை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக ஏக்நாத் ஷிண்டே கொண்டு வந்த முக்கிய திட்டத்தை தடுப்பதற்கான முயற்சி நடந்து வருகிறது. கடந்தாண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலுக்கு முன்பு, கல்யாண் கிராமப்புற தொகுதியின் 14 கிராமங்களை, நவி மும்பை மாநகராட்சி (NMMC) எல்லைக்குள் சேர்ப்பதற்கான திட்டத்தை வெளியிட்டார். கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று இந்த திட்டத்தை வெளியிட்டதால், இந்த கிராமங்களுக்குட்பட்ட நாடாளுமன்றத் தொகுதியில் ஏக்நாத் ஷிண்டேவின் மகன் ஸ்ரீகாந்த் ஷிண்டே வெற்றி பெற்றார்.

ஏக்நாத் ஷிண்டே கொண்டு வந்த திட்டத்திற்கு கூடுதல் நிதிச் சுமை ஏற்படும் என பா.ஜ.க அமைச்சர், தேவேந்திர பட்னாவிஸுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். தேவேந்திர பட்னாவிஸ் அரசாங்கத்தின் கீழ் உள்ள வனத்துறை அமைச்சர் கணேஷ் நாயக் எழுதிய அந்த கடிதத்தில், ‘கல்யாண் கிராமப்புற தொகுதியின் 14 கிராமங்களை நவி மும்பை மாநகராட்சியில் சேர்க்க வேண்டாம். இந்த கிராமங்கள் முன்பு நவி மும்பை மாநகராட்சியில் இருந்தன, ஆனால் அவை விலக்கப்பட்டன. இப்போது நீங்கள் அவற்றைச் சேர்க்க வேண்டும் என்றால், இந்த கிராமங்களுக்கு ரூ.6,500 கோடி நிதி வழங்கப்பட வேண்டும். இந்த கிராமங்களில் உள்ள அனைத்து சட்டவிரோத கட்டுமானங்களையும் அகற்ற வேண்டும். இந்த கிராமங்களை நவி மும்பையுடன் இணைக்க ஒரு சுரங்கப்பாதை அமைக்கப்பட வேண்டும். எனவே இந்த திட்டம் சாத்தியமில்லை.
நான் ஒரு அமைச்சர் மற்றும் பின்னர் எம்.எல்.ஏ., முதலில் நான் நவி மும்பையில் வசிப்பவன். வி மும்பை மாநகராட்சி ஏன் கூடுதலாக ரூ.6,500 கோடி சுமையை எடுக்க வேண்டும்? விவாதத்திற்கு இடமில்லை. நான் யாருக்கும் எதிரானவன் அல்ல. எனது தொகுதிக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிலைப்பாட்டை நான் எடுக்கிறேன். இந்த கிராமங்களின் வளர்ச்சியின் சுமையை, நவி மும்பையின் வரி செலுத்துவோர் ஏன் சுமக்க வேண்டும்?’ என்று குறிப்பிட்டிருந்தார்.
ஏக்நாத் ஷிண்டே கொண்டு வந்த திட்டத்தை பா.ஜ.க அமைச்சர் நிறுத்த வேண்டும் என்று கூறியிருப்பது, ஏக்நாத் ஷிண்டே மற்றும் தேவேந்திர பட்னாவிஸ் இடையிலான மோதலை இன்னும் வலுப்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.