பல்வேறு கட்ட நகர்வுகளுக்கு பிறகு நேற்று இரவு 9:30 மணி அளவில் மாமல்லபுரத்தின் அருகே மாண்டஸ் புயலின் வெளிவட்ட பாதை கடக்க துவங்கியது. இதன் காரணமாக மழையுடன் பலத்த காற்று வீசியது. கிட்டத்தட்ட அதிகாலை 3 மணி அளவில் மாண்டஸ் புயல் முழுவதுமாக கரையை கடந்தது. இதனை சென்னை வானிலை ஆய்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது.
நேற்று இரவு சென்னையில் பலத்த காற்றுடன் மழை பொழிந்ததால் பல இடங்களில் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். பல இடங்களில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. சென்னை உத்தண்டி குப்பத்தில் கடல் நீர் உட்புகுந்ததால் முழங்கால் அளவிற்கு சாலையில் நீர் தேங்கும் சூழல் ஏற்பட்டது. அப்பொழுது இரவு நேரத்தில் நடுத்தர வயது பெண் ஒருவர் தனது கணவரை காணவில்லை என அழுது புலம்பிக் கொண்டே சாலையில் வந்தார். இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
கல்லூரி ஒன்றில் தனது கணவர் கூலி வேலை பார்த்து வரும் நிலையில், இன்று வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு தற்போது வீட்டுக்கு வந்தார். திடீரென வீட்டுக்குள் நீர் சூழ்ந்தது. இந்நிலையில், என் கணவரை காணவில்லை என பெண்மணி அழுது புலம்பியபடி உதவி கேட்கும் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. 'ஒன்னும் இல்ல, பயப்படாதீங்க; நீங்க போங்கம்மா கண்டு பிடிச்சு தந்துருவாங்க' என அவருக்கு ஆறுதல் கூறிய நிலையில் இது தொடர்பாக மீட்பு படையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு மீட்பு வேனுடன் வந்த போலீசார் அவரையும் அவரது கணவரையும் மீட்டு முகாமிற்கு அழைத்துச் சென்று பத்திரமாக சேர்த்தனர்.