வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கருப்பம்புலம் ஊராட்சிமன்ற தலைவர் பதவிக்கு 32 ஆண்டுகளுக்கு பிறகு தேர்தல் நடந்தது.
நாகை மாவட்டத்தின் கடைகோடி பகுதியான வேதாரண்யத்திற்கும் திருத்துறைப்பூண்டிக்கும் இடையே உள்ள கருப்பம்புலம் ஊராட்சி காங்கிரஸ் பிரமுகரான பி.வி.ஆர். என்று அழைக்கப்படும் பி.வி.ராஜேந்திரன், அவரது அண்ணன் பி.பி.குழந்தைவேலுவின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வருகிறது. பஞ்சாயத்து அமைப்புமுறை நடைமுறைக்கு கொண்டுவரப்பட்ட 1957 ஆம் ஆண்டு முதல் 1986 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் நடைபெற்ற அனைத்து உள்ளாட்சித் தேர்தல்களில்களிலும் ஊராட்சி மன்றத்தலைவர் பதவிக்கு அவர்களது குடும்பமே அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப தலைவரை நியமன முறையில் நியமித்து வந்தனர்.
அதன் பிறகு 1986 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் வழக்கம்போல் போட்டி இல்லாமல் நியமனம் செய்ய அவர்கள் முடிவு செய்து பண்டரிநாதன் என்பவரை நியமித்தனர். அவரை எதிர்த்து ச.கி.முருகையன் என்பவர் துணிந்து வேட்புமனு தாக்கல் செய்து தேர்தலில் போட்டியிட்டார். வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த தேர்தலில் ச.கி.முருகையன் சொற்ப ஓட்டுகளை மட்டுமே வாங்கி பண்டரிநாதனிடம் தோற்றுப்போனார். அதனைத் தொடர்ந்து நான்கு முறை நடந்த ஊராட்சித் தேர்தல்களில் ஒருவர்கூட போட்டியிட முன்வரவில்லை. இரண்டு முறை பொது பிரிவிலும், இரண்டு முறை தனிப் பிரிவிலும் அவர்களின் விருப்பத்திற்கே சுழற்சி முறையில் தலைவர்களை தேர்ந்தெடுத்தனர்.
இந்தநிலையில் தற்போது நடந்த உள்ளாட்சித் தேர்தலில் ஊராட்சி தலைவர் பதவிக்கு 2 பேர் போட்டியிட்டனர். வழக்கம்போல் சுழற்சி முறையில் சபாபதி என்பவரை அந்த குடும்பத்தினர் தலைவர் பதவிக்கு போட்டியிட வைத்தனர். அவரை எதிர்த்து சுப்புராமன் என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்து, பிரச்சாரத்திலும் ஈடுபட்டார். இதனால் 32 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஊராட்சியில் தலைவர் பதவிக்கு மீண்டும் போட்டி ஏற்பட்டுள்ளது. அப்பகுதி வாக்காளர்கள் தங்கள் ஊராட்சி தலைவரை தேர்ந்தெடுக்க வரிசையில் நின்று வாக்களித்தனர். 1956 பெண்கள் உட்பட 3917 பேர் வாக்காளர்களாக கொண்டுள்ள இந்த ஊராட்சியில் 7 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு அதிக பாதுகாப்போடு நடத்தப்பட்டது.