
மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானின் தந்தையும், முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான தேபேந்திர பிரதான் இன்று (17.03.2025) காலமானார். அவருக்கு வயது 84. இவர் ஒடிசா மாநிலத்தில் பாஜகவின் முன்னாள் தலைவராகவும் பதவி வகித்து இருந்தார். முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் அரசில் தேபேந்திர பிரதான் மத்திய அமைச்சராக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தேபேந்திர பிரதான் மறைவுக்குப் பலரும் இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “முன்னாள் மத்திய அமைச்சரும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் தந்தையுமான தேபேந்திர பிரதான் மறைவு செய்தி கேட்டு வருத்தமடைந்தேன். மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த கடினமான சூழலைக் கடக்க அவருக்கு வலிமை கிடைக்கட்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவைக் குறிப்பிட்டு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தனது இரங்கலைப் பதிவு செய்துள்ளார். அதில், “முன்னாள் மத்திய அமைச்சர் தேபேந்திர பிரதான் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. இந்த கடினமான நேரத்தில் தனது அன்புக்குரிய தந்தையை இழந்து வாடும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக பிரதமர் மோடி வெளியிட்டிருந்த இரங்கல் செய்தியில், “தேபேந்திர பிரதான் கடின உழைப்பாளி மற்றும் பணிவான தலைவராக முத்திரை பதித்தார். ஒடிசாவில் பாஜகவை வலுப்படுத்த அவர் ஏராளமான முயற்சிகளை மேற்கொண்டார். வறுமை ஒழிப்பு மற்றும் சமூகத்தில் மக்களுக்கு அதிகாரமளித்தல் ஆகியவற்றில் முக்கியத்துவம் அளித்ததற்காகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் அவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. அவரது மறைவால் வேதனையடைந்தேன். அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தச் சென்றபோது அவரது குடும்பத்தினருக்குத் தனது இரங்கல்களைத் தெரிவித்துக் கொண்டேன்” எனத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.