
தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் நிறுவனத்தில் மதுபான முறைகேடுகள் நடைபெற்றதாக வெளியான தகவலின் அடிப்படையில், கடந்த 6ஆம் தேதி தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இந்த சோதனையில், மதுபானங்கள் இடமாற்றம் தொடர்பான பதிவுகள், போக்குவரத்து டெண்டர், பார் உரிம டெண்டர், சில மதுபான நிறுவனங்களுக்குச் சாதகமாக ஆர்டர்கள், டாஸ்மாக் விற்பனை நிலையங்களால் ஒரு பாட்டிலுக்கு ரூ. 10 முதல் 30 கூடுதல் கட்டணம் வசூலித்தது போன்ற முறைகேடுகள் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டது.
இதனால், டாஸ்மாக் நிறுவனத்திலும், மது ஆலைகளில் மூலம் ரூ.1000 கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அமலாக்கத்துறை வெளியிட்ட அதிர்ச்சி தகவல், தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இதற்கு எதிர்க்கட்சியினர், தமிழக அரசுக்கு எதிராக கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
டாஸ்மாக் ஊழல் விவகாரத்தை கண்டித்து பாஜக தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பாஜக மூத்த தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். பாஜகவினர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று பாஜக நடத்திய போராட்டத்தின் எதிரொலியாக சென்னை தலைமைச் செயலகத்திற்கு வரும் வாகனங்கள் தீவிர கண்காணிப்புகளுக்கு பின்னர் அனுமதிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக தலைமைச் செயலகம் எதிரே உள்ள ராஜாஜி சாலையில் தீவிர வாகன சோதனைக்கு பின்னரே வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறது. இன்றும் பாஜகவினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபடலாம் என்பதால் இந்த தீவிர சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.