
அத்திக்கடவு - அவினாசி திட்டத்தை நிறைவேற்றியதற்காக எடப்பாடி பழனிசாமிக்கு நடத்தப்பட்ட நன்றி தெரிவிக்கும் விழாவில் கலந்து கொள்ளாதது; ஜெயலலிதா பிறந்தநாள் அன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாதது; அண்மையில் நடைபெற்ற மாவட்ட நிர்வாகிகள் உடனான காணொளி ஆலோசனைக் கூட்டத்தில் நான்கு மணி நேரம் காத்திருந்தும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனிடம் எடப்பாடி பழனிசாமி பேசாமல் மௌனம் காத்தது என நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக சுற்றிச் சுழன்று வருகிறது எடப்பாடி- செங்கோட்டையன் இடையேயான பனிப்போர்.
தொடர்ந்து பட்ஜெட் கூட்டத்திற்காக சட்டப்பேரவை நிகழ்வுக்கு தனியாகவே வருவது, தனியாகவே தனிவழியில் செல்வது என செங்கோட்டையனின் செயல்பாடுகள் பேசுபொருளாகின. இந்நிலையில் சட்டப்பேரவை நிகழ்வில் பள்ளிக்கல்வித்துறை குறித்த விவாதத்தில் செங்கோட்டையன் பேசுவதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சபாநாயகரிடம் வாய்ப்பு கேட்டுள்ளார். இதனால் செங்கோட்டையன் சகஜ நிலைக்கு திரும்பி விட்டார் என கூறப்படுகிறது.

நேற்று சபாநாயகர் மீது அதிமுக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு செங்கோட்டையன் ஆதரவு தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்றைய விவாதத்தில் பள்ளிக்கல்வித்துறையில் நிறையத் திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் உள்ளது. திமுக தேர்தல் அறிக்கையில் சொல்லிய விஷயங்கள் நிறைவேற்றப்படவில்லை என அதிமுக குற்றச்சாட்டுகளை வைத்தது. இதற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சில விளக்கங்களை கொடுத்தார். அதிமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறையில் இருந்த குளறுபடிகளைச் சுட்டிக்காட்டி பேசினார். அப்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் பின்வரிசையில் செங்கோட்டையன் அமர்ந்திருந்த நிலையில், ஆர்.பி.உதயகுமார் எடப்பாடியிடம் முணுமுணுக்க, 'முன்னாள் கல்வித்துறை அமைச்சர் என்ற முறையில் செங்கோட்டையனுக்கு பேச வாய்ப்பு கொடுக்கும்படி' எடப்பாடி சபாநாயகரிடம் கேட்டுக்கொண்டார். ஆனால் நேரமில்லை, எதிர்க்கட்சித் தலைவராகிய நீங்கள் வேண்டுமானால் பேசலாம் என சபாநாயகர் வாய்ப்பு கொடுத்தார்.
சக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுடன் செங்கோட்டையன் உணவு அருந்தினார் என்றும், செங்கோட்டையன் பேச வாய்ப்பு கேட்டதால் எடப்பாடி பழனிசாமி செங்கோட்டையன் இருவருக்கு இடையேயான பனிப்போர் முற்றுப்பெற்று செங்கோட்டையன் சகஜ நிலைக்கு திரும்பியுள்ளார் என்றும் அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.