
முன்பொரு காலத்தில், இந்தியாவில் பெண் குழந்தைப் பிறந்தாலோ அல்லது குழந்தை பெண்ணாகப் பிறக்கும் என அறிந்தாலோ அந்த குழந்தையைக் கருக்கலைப்பு அல்லத்து கொலை செய்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். ஆணாதிக்க சமூகத்தில் கடைபிடித்து வந்த பிற்போக்கான நடைமுறையை மாற்றுவதற்கு அரசு பல்வேறு முன்னெடுப்பு எடுத்து வந்தது. கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறிவது சட்டப்படி குற்றமாகும் என்ற நடைமுறையை கொண்டு வந்தது. அதன் பிறகு, பெண் சிசு கொலை வெகுவாக குறைந்தது. இருந்த போதிலும், இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஆண் குழந்தை வேண்டி பெண் குழந்தையை கொலை செய்யும் நடைமுறையை மக்கள் அறியாமையில் செய்து வருகின்றனர்.
அந்த வகையில், பெண் குழந்தை பிறந்ததால், அந்த குழந்தையை பெற்ற தாயே தண்ணீர் தொட்டியில் போட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம், ராஜஸ்தானில் ஜுன்ஜுனு பகுதியைச் சேர்ந்தவர் ஆச்கி தேவி (22). இவருக்கு சமீபத்தில் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்று விருப்பமாக இருந்த ஆச்கி தேவிக்கு, பெண் குழந்தை பிறந்ததால் அவர் ஏமாற்றமடைந்துள்ளார். இதில் விரக்தியடைந்த ஆச்கி தேவி, தனது 17 நாள் பெண் குழந்தையை தண்ணீர் தொட்டியில் போட்டு அதன் மூடியை மூடியுள்ளார். இதில் மூச்சடைத்து, அந்த பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து, ஆச்கி தேவியின் கணவர் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், ஆச்கி தேவி மீது கொலை வழக்குப் பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர். இதையடுத்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.