
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கோயிலூர் கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாலபுரீஸ்வர் லோகநாயகி அம்பாள் திருக்கோயில் குடமுழுக்கு அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் போலீசார் பாதுகாப்புடன் நேற்று காலை நடந்தது. குடமுழுக்கில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். குடமுழுக்கு முடிந்த பிறகு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து மாலையில் சிறப்பு வழிபாடு செய்யப்பட்ட நிலையில் ஒரு தரப்பினர் சாமி தரிசனம் செய்ததுடன் பினனால் நின்றவர்கள் தரிசனம் செய்வதற்குள் சாமி உள்ளே எடுத்து செல்லப்பட்டதாகக் கூறி சாமியை தரிசனம் செய்யமுடியாத ஏராளமான பக்தர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஆலங்குடி டிஎஸ்பி கலையரசன் மற்றும் காவல் ஆய்வாளர் சிவசுப்பிரமணியன் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்டிருந்தவர்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர்.

அந்த நேரத்தில் கோயில் மைக் செட் சத்தம் பேச்சுவார்த்தைக்கு இடையூறாக இருந்ததால் டிஎஸ்பி கலையரசன் அதனை நிறுத்துமாறு கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து, சாலை மறியலில் நின்ற சிலர் கோயிலுக்குள் சென்று மைக் செட்டை நிறுத்தியுள்ளனர். அப்போது அங்கு கூட்டமாக இருந்தவர்களில் சிலர் மைக் செட் நிறுத்த வந்தவர்களை கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதனைப் பார்த்த ஆலங்குடி காவல் ஆய்வாளர் சிவசுப்பிரமணியன் அங்கு வந்த போது பிளாஸ்டிக் சேர்களை எடுத்துத் தாக்கியதில் ஆய்வாளர் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இதைப் பார்த்த பிறகு டிஎஸ்பி கலையரசன் தலைமையிலான போலீசார் அங்கு குவிந்ததும் கோயிலுக்குள் இருந்த தரப்பினர் வெளியேறி போலீசாருக்கு எதிராகக் கோஷமிட்டபடியே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவத்தில் காயமடைந்த காவல் ஆய்வாளர் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஆகியோரை ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தகவல் அறிந்து புதுக்கோட்டை எஸ்.பி அபிஷேக் குப்தா மற்றும் வருவாய் கோட்டாட்சியர் ஐஸ்வர்யா ஆகியோர் வந்து விசாரணை செய்தனர். தொடர்ந்து கோயில் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் காவல் ஆய்வாளர் மீது தாக்கி ரத்த காயம் ஏற்படுத்தியவர்களை அடையாளம் காண அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடி கேமராவை ஆய்வு செய்த போது காட்சிகள் பதிவாகும் ஹார்ட் டிஸ்க்கை காணவில்லை. கலவரத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் அடையாளம் காணக்கூடாது என்பதற்காக ஹார்ட் டிஸ்க்கை கழற்றிச் சென்றுள்ளது தெரிய வந்தது. இதனையடுத்து ஹார்ட் டிஸ்க் திருடிச் சென்றவர்களை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யவும் போலீசார் தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று குடமுழுக்கு நடந்த பாலபுரீஸ்வர் கோயில் பக்தர்கள் கூட்டமின்றி வெறிச்சோடிக் காணப்படுகிறது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அப்பகுதியினர் கூறும் போது இது போன்ற அசம்பாவிதங்களை தவிர்க்க அரசு அதிகாரிகள் முறையான பேச்சுவார்த்தை நடத்தி கோவில் மண்டல அபிஷேகங்களில் பங்கேற்ற வழி செய்ய வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.