Skip to main content

டி.டி.எஃப் வாசனின் ஓட்டுநர் உரிமம் ரத்து

Published on 07/10/2023 | Edited on 07/10/2023

 

DTF Vasan's driving license suspended for 10 years

 

சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், காஞ்சிபுரம் அருகே உள்ள பாலுசெட்டி எனும் பகுதியில் டி.டி.எஃப். வாசன் தனது இருசக்கர வாகனத்தில் கோவை நோக்கி கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதி (17.9.2023) சென்று கொண்டிருந்தார். அப்போது தனது வாகனத்தில் முன் சக்கரத்தைத் தூக்கி சாகசம் செய்ய முயற்சி செய்துள்ளார். அந்த சமயத்தில் அவரது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சில அடி தூரம் தூக்கி வீசப்பட்டார். இதில் காயமடைந்த அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.

 

இதனைத் தொடர்ந்து டி.டி.எஃப் வாசன் மீது உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை இயக்கியது, கவனக்குறைவாகச் செயல்படுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் பாலுச்செட்டி சத்திரம் போலீஸ் வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து ஜாமீன் கேட்டு காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை, நீதிபதி செம்மல் முன்பு விசாரணைக்கு வந்தபோது, டிடிஎஃப் வாசனுக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்திருந்தார்.

 

இதனைத் தொடர்ந்து டி.டி.எஃப். வாசனின் நீதிமன்றக் காவல் 3 ஆம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில், அக்டோபர் 16 ஆம் தேதி வரை நீட்டித்து மேலும் 15 நாட்களுக்கு அவரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி இனியா கருணாகரன் உத்தரவிட்டு இருந்தார். இதற்கிடையில் டி.டி.எப்.வாசன் ஜாமீன் மனுவை காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றம் 2 முறை நிராகரித்திருந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார். 

 

இந்த நிலையில், டி.டி.எஃப் வாசனின் ஓட்டுநர் உரிமத்தை 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்து காஞ்சிபுரம் ஆர்.டி.ஓ. உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து அதிவேகமாக வாகனங்களை ஓட்டி, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்படுவதால் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு மூலம் 2033ம் ஆண்டு அக்டோபர் 5ம் தேதி வரை ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'டிடிஎஃப் வாசன் என்ன உலக அதிசயமா?'' - வாசனுக்காக கூடிய இளைஞர்களை ட்ரோல் செய்த முதியவர் 

Published on 25/11/2023 | Edited on 25/11/2023

 

'What is TTF Vaasan a wonder of the world?''-old man who trolled youths gathered for Vaasan

 

அண்மையில் காஞ்சிபுரத்தின் பாலுச்செட்டி சத்திரம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற டிடிஎஃப் வாசன் எனும் பிரபல யூடியூபர் வாகன சாதத்தில் ஈடுபட்ட பொழுது விபத்துக்குள்ளானார். காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், பாலுசெட்டி சத்திரம் காவல் நிலைய போலீசார் பல்வேறு வழக்குகள் பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர். சிறையில் அடைக்கப்பட்ட டிடிஎஃப் வாசன், பலமுறை ஜாமீன் மனுக்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தும் ஜாமீன் கிடைக்காமல் இருந்தது. தொடர்ந்து அவருக்கு நிபந்தனையுடன் ஜாமீன் அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.  பாலுசெட்டி சத்திரம் காவல் நிலையத்தில் அவர் கையெழுத்திட வேண்டும் என்று நீதிமன்றம் நிபந்தனை விதித்திருந்தது. அதன் காரணமாக டிடிஎஃப் வாசன் அங்கு வந்து கையெழுத்து போட்டுவிட்டு செல்வது வழக்கம். அவர் வரும்போதெல்லாம் இளைஞர்கள் அங்கு கூடுவது தொடர்ந்து வந்தது. இந்நிலையில் இன்று டிடிஎஃப் வாசன் வர இருந்ததால், கூட்டம் கூடியது. இதனால் செய்தியாளர்களும் கூடினர். கூடிய இளைஞர்கள் டிடிஎப் வாசனை சுற்றி சூழ்ந்து கொண்டு செல்பி எடுத்துக் கொண்டனர். பின்னர் அவர் அங்கிருந்து கிளம்பினார்.

 

அங்கு நின்றிருந்த செய்தியாளர்களிடம் காஞ்சிபுரம் பகுதியில் ஊரகத் துறையில் குடிநீர் ஆபரேட்டராக வேலை செய்யும் முதியவர் ஒருவர் பேசினார். ''சாகசம் என்ற பெயரில் இந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. போற வர பயணிகளை அச்சுறுத்தும் வகையில் இரு சக்கர வாகனத்தில் சில இளைஞர்கள் செல்கின்றனர். இந்த சாகசங்களுக்கு தமிழக அரசு தான் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மிக அதிகமான வேகத்தில் செல்லும் வாகனங்களை தடை செய்ய வேண்டும். டிடிஎஃப் வாசன் என்னமோ உலக அதிசயம் மாதிரி பார்த்துகிட்டு இருக்காங்க. சமூகத்திற்கு சீர்கேடான வேலை இதெல்லாம். இந்த சமூகம் சீர்கேட்டை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது. அண்மையில் நடிகர் விவேக்கிற்கு நினைவு நாள் வந்தது. அதுக்கெல்லாம் ஏதாவது மரம் நடலாம். அதுபோன்றுதான் செய்யலாம். அதை விட்டு இதெல்லாம் என்ன நல்லது'' என தனது ஆதங்கத்தை கொட்டினார்.

 

அப்பொழுது அங்கு வந்த டிடிஎப் வாசனின் ரசிகரான இளைஞர் ஒருவர் ''அவர் இஷ்டம் ஓட்டுறாரு. அவர் கஷ்டப்பட்டு சப்ஸ்கிரைபர் வாங்கி ஓட்டுறாரு'' என்றார். அதற்கு அந்த பெரியவர் ''அவர் கஷ்டப்பட்டு ஓட்டுறாரு என்றால் அவருடைய சொந்த நிலத்தில் ஓட்டுங்க. ரோட்ல போற எங்களை ஏன் பயமுறுத்த மாதிரி ஏன் ஓட்ட வேண்டும்'' என்றார். அதற்கு அந்த இளைஞர், 'கோடிக்கணக்கான பேன்சுங்க இருக்காங்க அவங்களுக்கு. நீங்க என்ன கட்சியில் இருக்கீங்க'' என்று கேட்க, அந்த முதியவர் 'நான் விவசாயி' என்றார். இப்படியாக அந்த முதியவரும் அந்த இளைஞரும் சிறிது வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

 

 

 

Next Story

''பெரியார் பிறந்த நாளிலே... அண்ணா பிறந்த மண்ணிலே...''- உசுப்பேற்றிய மஞ்சள் வீரன் இயக்குநர்

Published on 03/11/2023 | Edited on 03/11/2023

 

"On the day Periyar was born... in the land where Anna was born..."- Yellow Veeran director who made an angry comedy

 

சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், காஞ்சிபுரம் அருகே உள்ள பாலுசெட்டி எனும் பகுதியில் டி.டி.எஃப். வாசன் தனது இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்ய முயன்று சாலையில் சில அடி தூரம் தூக்கி வீசப்பட்டார். இந்த சம்பவத்தில்  5 பிரிவுகளின் கீழ் பாலுசெட்டி சத்திரம் போலீஸ் வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்திருந்தனர். இதில் டி.டி.எஃப்.வாசனின் இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டுகள் ரத்து செய்யப்பட்டது.

 

தொடர்ந்து பலமுறை காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்திலும், சென்னை உயர்நீதிமன்றத்திலும் டி.டி.எஃப். வாசன் தரப்பில் ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்தும் பலனளிக்காத நிலையில் ஒருவழியாக சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீன் வழங்கியது. இந்நிலையில் இன்று புழல் சிறையில் இருந்து வெளியே வந்த டி.டி.எஃப். வாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பைக் தான் என்னுடைய உயிர். அதை எப்படி ஓட்டாமல் இருப்பேன். பைக்கும் ஓட்டுவேன் படமும் நடிப்பேன். இரண்டும் என் பேஷன். அதை விட்டுவிட மாட்டேன். இண்டர்நேஷனல் லைசன்ஸ் எடுக்கலாம், இல்லையென்றால் ஏதாவது மேல்முறையீடு செய்யலாம்'' என தெரிவித்தார்.

 

அதனைத் தொடர்ந்து அவர் நடித்து வரும் மஞ்சள் வீரன் படத்தின் இயக்குநர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''இவர் கீழே விழுந்த தேதி தெரியுமா உங்களுக்கு யாருக்காவது (செய்தியாளர்களை நோக்கி) ஒருத்தங்க சொல்லுங்க. செப்டம்பர் 17ஆம் தேதி கீழே விழுந்தார். அன்று பெரியாருடைய பிறந்தநாள். காஞ்சிபுரத்தில் விழுந்தார். பெரியார் பிறந்த தினத்திலே, அறிஞர் அண்ணா பிறந்த மண்ணிலே வீழ்ந்த ஒருவன் மாபெரும் தலைவனாக இந்த மண்ணிலே வருவான்.. வருவான்... கை வலிகள் சரியான பிறகு மீண்டும் படப்பிடிப்பு துவங்கும்'' என்றார். இதையெல்லாம் கேட்டு டி.டி.எஃப்.வாசனே குபீர் என சிரித்தார். 

 

'இப்படி உசுப்பேற்றி உசுப்பேற்றித்தான் உடம்ப ரணகளம் ஆக்கி வச்சிருக்காங்க' என மஞ்சள் வீரன் இயக்குநரின் பேச்சுக்கு இணையவாசிகள் கமெண்டுகளை தட்டிவிட்டு வருகின்றனர்.