வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே மணல் கடத்தில் லாரியை செல்போனில் வீடியோ எடுத்ததால் முன்னாள் ராணுவ வீரரை அரிவாளால் வெட்டியுள்ளனர்.
வேலூர் மாவட்டம் பொன்னை ஆற்றிலிருந்து மணல் கடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் பொன்னையாற்றின் கொக்கரி பகுதியில் மர்ம கும்பல் ஒன்று மணல் கடத்தி சென்றுள்ளது. அப்போது கொக்கேரி கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் உமாபதி மணலைக் கடத்திச் சென்ற லாரியைத் தனது செல்போனில் படம் எடுத்துள்ளார்.
அப்போது லாரியிலிருந்து கீழே இறங்கிய கும்பல், எதற்காக செல்போனில் படம் எடுக்குற என்று மிரட்டியுள்ளனர். நீங்கள் மணல் கடத்துவதால்தான் வீடியோ எடுப்பதாக முன்னாள் ராணுவ வீரர் கூற, லாரியிலிருந்து அரிவாளை எடுத்து அவரை ஓட ஓட விரட்டி வெட்டியுள்ளனர். அதில் தலையில் பலத்த காயமடைந்த ராணுவ வீரரை அக்கம்பக்கத்தினர் மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் கொக்கேரி பகுதியைச் சேர்ந்த முனுசாமி, குமரேசன், நவீன் மற்றும் சூர்யா என்பது தெரியவந்துள்ளது. தற்போது அவர்கள் 4 பேரும் தலைமறைவாக உள்ள நிலையில் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.