கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னை கிழக்கு மாவட்டம் துறைமுகம் கிழக்கு பகுதியில் ஆயிரம் சாலையோர வாழ் மக்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் ரொக்கமாக ஆயிரம் ரூபாய் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் கீதா ஜீவன், ''அடுத்து வருகின்ற ஜூன் 24 வரை தொடர்ச்சியாக திமுக சார்பில் இந்த மாதிரியான சிறப்பான நிகழ்ச்சிகள் நடைபெறும். தமிழக முதல்வர் ஏற்கனவே சொல்லி இருக்கிறார் மகளிர் உரிமைத்தொகை வராதவர்கள் மீண்டும் மேல்முறையீடு செய்வதற்கும், விண்ணப்பம் செய்வதற்கும் நேரம் கொடுத்துள்ளார்கள். 30 நாட்கள் நேரம் கொடுத்துள்ளார்கள். நிறைய பேர் இதில் அப்பீல் செய்து கொண்டிருக்கிறார்கள். மணி ஆர்டர் மூலம் பணம் வருகிறது. சிலருக்கு உங்களுடைய விவரங்கள் முழுமையாக அறியப்படவில்லை என பதில் வந்துள்ளது. அவர்களெல்லாம் மேல்முறையீடு பண்ண வேண்டும். சிலர் விண்ணப்பத்தை வாங்கி கைகளிலேயே வைத்திருக்கிறேன்; நான் ஆஸ்பத்திரியில் இருந்தேன்; டெலிவரிக்கு போய் விட்டேன் என சொல்பவர்களும் வரும் வியாழக்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம்'' என்றார்.
அப்பொழுது செய்தியாளர்கள் 'இந்த மாதம் ஆயிரம் ரூபாய் தொகையானது மேலும் உயர்த்தப்படுமா' என்ற கேள்விக்கு, ''ஒரு ரூபாய் கூட தராமல் இருந்தது. இப்பொழுது மாதம் ஆயிரம் ரூபாய் தருகிறோம். எனவே இது அடுத்து உயர்த்தப்படுமா என்ற கேள்விக்கு நான் இன்று பதில் சொல்ல முடியாது. அனுமானத்தில் பதில் எதுவும் சொல்ல முடியாது'' என்றார். மேலும் ''வசதி படைத்தவர்கள் இருந்தால் அவர்களாக தானாக முன்வந்து விலக வேண்டும். எனக்கு இந்த ஆயிரம் ரூபாய் தேவையில்லை. நான் 75 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறேன்; எனக்கு வருமானம் இருக்கிறது என விலக வேண்டும். இப்போதைக்கு தகுதி உள்ளவர்கள், தேவை உள்ளவர்கள் விண்ணப்பம் செய்து கொள்ளலாம், மேல்முறையீடு செய்து கொள்ளலாம்'' என்றார்.