சித்த மருத்துவர் திருத்தணிகாசலத்தை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவை எதிர்த்த மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கும், சென்னை காவல் ஆணையருக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரோனா தொற்றுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாகவும், உலக சுகாதார நிறுவனம் மற்றும் தமிழக முதல்வருக்கு எதிராக சமூக ஊடகங்களில் தகவல் பரப்பியதாகவும் சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் மீது வழக்கு பதிவு செய்த சைபர் குற்றத் தடுப்பு காவல் துறையினர் அவரை கைது செய்தனர்.
இந்நிலையில், அவர் மீது மேலும் புகார்கள் அதிகரித்ததை தொடர்ந்து, அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க சென்னை காவல்துறை ஆணையர் உத்தரவிட்டார்.
குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டதை எதிர்த்து, திருத்தணிகாசலத்தின் தந்தை கலியபெருமாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.பாலு, கரோனா தடுப்புக்காக கபசுர குடிநீர் குடிப்பதை ஊக்குவித்ததாகவும் மற்றும் அரசு குறித்து சில கருத்துகளை தெரிவித்ததாகவும் வழக்கு பதியப்பட்டு, குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளது சட்டவிரோதம் என வாதிட்டார்.
காவல்துறை தரப்பில் ஆஜரான அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் பிரபாவதி, சித்த மருத்துவ சிகிச்சை அளிக்க, திருத்தணிகாசலம் தகுதி பெற்றவர் அல்ல என்றும், பதிலளிக்க 4 வார கால அவகாசம் வேண்டுமெனவும் கோரிக்கை வைத்தார்.
நீதிபதிகள் குறுக்கிட்டு, கபசுர குடிநீர் குடிக்க அறிவுரை வழங்கியதற்காக குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளாரா? என ஒரு வாரத்தில் தமிழக உள்துறை செயலாளர், சென்னை காவல் ஆணையர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்துள்ளனர்.