18 எம்.எல்.ஏக்களில் ஒருவரை அவர்கள் பக்கம் இழுத்தால் கூட, மற்ற 17 எம்.எல்.ஏக்களும் எடப்பாடி அணிக்கு வருகிறோம் என தங்க.தமிழச்செல்வன் சவால் விடுத்துள்ளார்.
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் கடந்த ஜூன் 14 ஆம் தேதி அன்று பிற்பகல் 1 மணி அளவில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் அமர்வு தீர்ப்பு வழங்கியது.. அதில், சபாநாயகரின் உத்தரவு செல்லும் என நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்தார். ஆனால் நீதிபதி எம்.சுந்தர் சபாநாயகரின் உத்தரவு செல்லாது என தெரிவித்தார்.
இரு நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பையடுத்து, 3வது நீதிபதிக்கு வழக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 3வது நீதிபதி தீர்ப்பு வழங்கும் வரை 18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்கம் தொடரும். தகுதிநீக்க வழக்கின் முடிவு வரும் வரை இடைத்தேர்தல் நடத்தக்கூடாது என்ற இடைக்கால உத்தரவு நீடிக்கும் என்றும் 3வது நீதிபதி விரைவில் நியமிக்கப்படுவார் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்காக இந்த வழக்கை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேசுக்கு, தலைமை நீதிபதியும், நீதிபதி எம்.சுந்தர் ஆகியோரும் அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து 3-வது நீதிபதியாக யாரை நியமிப்பது என்று மூத்த நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஷ் பரிசீலித்தார். பின்னர், உயர்நீதிமன்றத்தில், மூத்த நீதிபதியாக இருக்கும் நீதிபதி எஸ்.விமலாவை நியமிக்க முடிவு செய்தார். இதுதொடர்பான நிர்வாக உத்தரவை நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஷ் பிறப்பித்துள்ளார். இதைத்தொடர்ந்து வழக்கு விசாரணை விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், சென்னையில் இன்று டிடிவி தினகரனுடன் 18 எம்.எல்.ஏக்களுக்குமான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தங்க.தமிழ்செல்வன்,
எனது தொகுதி மக்களுக்கு பணியாற்ற எம்.எல்.ஏ வேண்டும் என்பதாலேயே வழக்கை வாபஸ் பெற முடிவெடுத்தேன். நீதிமன்றத்தின் தீர்ப்பில் எனக்கு நம்பிக்கை இல்லை. புதுவைக்கு ஒரு தீர்ப்பு, தமிழகத்திற்கு ஒரு தீர்ப்பு என நீதிமன்றமே வேறுபாடு காட்டுகிறது. 18 எம்.எல்.ஏ-க்களும் ஓரணியில் நின்று தினகரனை ஆதரிக்கிறோம். எடப்பாடி அணிக்கு தாவ உள்ளதாக வந்த செய்திகள் அனைத்தும் வதந்தியே.
எங்கள் அணியில் மொத்தமுள்ள 18 எம்.எல்.ஏக்களில், ஒருவர் கூட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு செல்ல தயாரில்லை. அப்படி எங்களில் ஒரு எம்.எல்.ஏவை அவரது அணிக்கு இழுத்து விட்டால் கூட, மொத்தமாக மீதமுள்ள 17 பேரும் அவரது அணிக்கு செல்ல தயார். இவ்வாறு அவர் கூறினார்.