தமிழக அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் அறங்காவலர்கள் குறித்த விவரங்களை பொது அறிவிப்பாக வெளியிடக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகிலுள்ள மன்னார்கோவிலில் உள்ள ஸ்ரீ ராஜகோபாலசாமி குலசேகர ஆழ்வார் திருக்கோவிலின் அர்ச்சகர் பெரியநம்பி நரசிம்ம கோபாலன் தாக்கல் செய்த மனுவில், இந்து சமய அறநிலையத்துறை சட்டவிதிகளுக்கு முரணாக, அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு அறங்காவலர்கள் நியமிக்கப்படுகின்றனர், அதில் வெளிப்படைத்தன்மை இல்லை.
கோவில்களில், அறங்காவலரின் பெயர், தொழில், சுய வருமானம், கோவிலின் பாரம்பரிய நடைமுறைகள் குறித்த ஞானம், கோவில் நில ஆக்கிரமிப்பில் ஈடுபடாதவரா, அரசியல் தலையீடு இல்லாமல் பணியாற்றக்கூடியவரா என்பது போன்ற விவரங்களை, அந்ததந்த பகுதிகளில் உள்ள நாளிதழ்களில் பொது அறிவிப்பாக வெளியிட்டு, கோவில் அலுவலகங்களில் பக்தர்களின் பார்வைக்கு வைப்பதற்கு, அறநிலையத்துறைக்கு உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அமர்வு, தமிழக அரசும், இந்து சமய அறநிலையத்துறையும் மூன்று வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.