மத்திய நிலத்தடிநீர் ஆணையம் கடந்த ஏப்ரல் மாதம், "நீச்சல் குளம், சுரங்கத் திட்டங்கள்,உட்கட்டமைப்பு, தொழிற்சாலைகள், தண்ணீர் விநியோகிப்பாளர்கள், குடியிருப்பாளர் நலச் சங்கங்கள், அடுக்குமாடிக் குடியிருப்புகள் உட்பட அனைத்து நிலத்தடி நீர் பயன்பாட்டாளர்களும் நிலத்தடி நீர் எடுப்பதற்கான தடையில்லாச் சான்றிதழை ஜூன் 30ஆம் தேதிக்குள் மத்திய நிலத்தடி நீர் ஆணையத்திடம் பெற வேண்டும் என்றும் அதற்கான விண்ணப்பம் அளிக்கும்போது ரூ.10 ஆயிரம் செலுத்த வேண்டும் என்றும் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இந்த அறிவிப்பு தொடர்பான பதிவு கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பரவிவந்த நிலையில், மத்திய அரசின் இந்த அறிவிப்பிற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த அறிவிப்பானது தமிழகத்திற்கு பொருந்தாது என தமிழக பாஜகவினர் விளக்கம் அளித்த நிலையிலும், இது தொடர்பான குழப்பம் தொடர்ந்து நிலவிவந்தது.
இந்த நிலையில், மத்திய நிலத்தடி நீர் ஆணையம் வெளியிட்ட இந்த அறிவிப்பானது தமிழகத்திற்கு பொருந்தாது என தமிழக நீர்வளத்துறை விளக்கமளித்துள்ளது. இது தொடர்பாக தமிழக நீர்வளத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், நில நீர் பாதுகாப்பு மற்றும் நிலத்தடி நீர் எடுப்பது தொடர்பாக நடைமுறையில் உள்ள விதிகள் மறு அறிவிப்பு வரும்வரை பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய நிலத்தடி நீர் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 20 மாநிலங்களுக்கு மட்டுமே இந்த அறிவிப்பானது பொருந்தும் என மத்திய நிலத்தடி நீர் ஆணையம் தன்னுடைய இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.