தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆந்திர கடற்கரை பகுதியில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி வலுவிழந்து, தற்போது ஆந்திரா, தெலங்கானா பகுதியில் வளிமண்டல சுழற்சியாக நீடிக்கிறது. அதன் காரணமாக, கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருப்பத்தூர், திருவள்ளூர் ஆகிய 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; நகரின் சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக பந்தலூர் (நீலகிரி)- 5 செ.மீ., கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்)- 4 செ.மீ.,மழை பதிவாகியுள்ளது. மன்னார்வளைகுடா, தென்மேற்கு, தென்கிழக்கு வங்கக்கடல், அந்தமான், கர்நாடகா, வடகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசும். பலத்த காற்று வீச வாய்ப்புள்ள கடலோரப் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்ப்பிடிக்கச் செல்ல வேண்டாம். இவ்வாறு சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.