18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை பெரியமேட்டில் உள்ள மத்திய அரசின் மருந்து சேமிப்புக் கிடங்கில் தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார்.
ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், "சென்னை உள்ளிட்ட 4 இடங்களில் கரோனா தடுப்பு மருந்து சேமித்து வைக்கப்படவுள்ளது. ஜனவரி 8-ஆம் தேதி முதல் கரோனா தடுப்பூசி ஒத்திகை அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும். மத்திய அரசு வழங்கிய அடுத்த நாளில் இருந்து தடுப்பூசி விநியோகிக்க தமிழக அரசு தயாராக உள்ளது.
முதன்மை சேமிப்புக் கிடங்கில் இருந்து தடையின்றி தடுப்பு மருந்து மாவட்டங்களுக்கு எடுத்துச் செல்லப்படும். இரண்டு கோடி தடுப்பூசிகளைப் பதப்படுத்தி வைக்கும் வசதி மத்திய மருந்து சேமிப்பு கிடங்கில் உள்ளது. தமிழகத்தில் முதற்கட்டமாக 6 லட்சம் பேருக்குக் கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்படவுள்ளது. கரோனா தடுப்பு மருந்து செலுத்த 33 லட்சம் ஊசிகள் அனைத்து மாவட்டங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படும். கடந்த ஜூன் மாதம் முதலே கரோனா தடுப்பூசிக்கான ஏற்பாடுகளைத் தமிழக அரசு முன்னெடுத்துள்ளது. சென்னை வரும் கரோனா தடுப்பூசிகளைச் சேமித்து வைக்க மத்திய அரசின் சேமிப்புக் கிடங்கு முழு அளவில் தயாராக உள்ளது.
18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே கரோனா தடுப்பூசி செலுத்தப்படும். முதலில் சுகாதாரத்துறைப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்படும். கரோனாவுக்கு எதிரான முன்களப்பணியாளர்களுக்கு இரண்டு கட்டங்களாக தடுப்பூசி போடப்படும். முதியவர்களுக்கு முன்னுரிமை அளித்து கரோனா தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என்றார்.