புயல், மழைச் சேதங்களைப் பார்வையிட்ட பின் திருவாரூரில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "புயல், மழை, வெள்ளப் பாதிப்புகள் குறித்து கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. விடுபட்ட பகுதிகளிலும் புயல், மழைச் சேதங்கள் கணக்கெடுக்கப்படும். 'நிவர்' புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மின் கம்பங்கள் சரி செய்யப்பட்டுள்ளன. நோய்ப் பரவலைத் தடுக்க மாவட்டம் முழுவதும் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
'புரெவி' புயலால் 7 பேர் உயிரிழந்துள்ளனர். 5,509 வீடுகள் சேதமடைந்துள்ளன. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 2,07,463 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். திருவாரூர் மாவட்டம் முழுவதும் 492 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. நடமாடும் மருத்துவ முகாம்கள் மூலம் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பலன் அடைந்தனர். டெல்டா சமப் பரப்பாக இருப்பதாலும், கடல் சீற்றத்தாலும் மழைநீர் கடலுக்குச் செல்ல முடியாமல் தண்ணீர் தேங்குகிறது.
திருவாரூர் மாவட்டத்தில் 53,063 ஹெக்டேர் நிலங்கள் விளைநிலங்கள், வெள்ளத்தில் சேதமடைந்துள்ளன. அதிகமாக தூண்டில் வளைவு அமைத்தது நாங்கள்தான். மூன்று வேளாண் சட்டங்களால் தமிழக விவசாயிகளுக்கு என்ன பாதிப்பு என்பதைச் சொல்லுங்கள்? பயனளிக்கும் என்பதால் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை தமிழக அரசு வரவேற்கிறது. மற்ற மாநிலங்களில் இடைத்தரகர்கள் இருப்பதால் அதை அகற்ற மத்திய அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது. விளைபொருட்களை நல்ல விலைக்கு விவசாயிகள் விற்க வேண்டும் என்பதே தமிழக அரசின் நோக்கம். வேளாண் சட்டங்களால் தமிழக விவசாயிகளுக்குப் பாதிப்பில்லை. விருப்பப்பட்டால் மட்டுமே வேளாண் சட்டத்தை தமிழக விவசாயிகள் பயன்படுத்தலாம். அரசியல் காழ்ப்புணர்ச்சிக் காரணமாக சிலர் வேளாண் சட்டங்களை எதிர்க்கிறார்கள். வேளாண் சட்டத்தில் உள்ள தவறு என்ன என்பதைக் கூறினால் பதில் அளிக்கத் தயார்.
விபத்து, காலவிரயம், எரிபொருள் சேமிப்பு, போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க சாலை விரிவாக்கம் அவசியம். 8 வழிச்சாலை என்பது நீண்ட காலத் திட்டம்; மத்திய அரசின் திட்டம்; இப்போது தொடங்கினால் கூட முடிய 6 ஆண்டுகளாகும். வெளிநாடுகளில் குறைந்தபட்சமே 8 வழிச்சாலைதான் உள்ளது; நாடு, தொழில் வளர்ச்சிக்கு சாலை அவசியம். தி.மு.க ஆட்சியில் 17 நெடுஞ்சாலை விரிவாக்கத் திட்டம் கொண்டு வந்தபோது சுற்றுச்சூழல் பாதிக்கவில்லையா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.