தடையை மீறி வேல் யாத்திரை தொடங்கிய எல்.முருகனை போலீசார் கைது செய்தனர்.
வெற்றிவேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி மறுத்த நிலையில், தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன், பிரத்யேக வாகனம் மூலம் வேல் யாத்திரையைத் தொடங்க, கடவுள் முருகனை வழிபட கையில் வேலுடன் திருத்தணி கோயிலுக்கு புறப்பட்டார். இந்த யாத்திரையில் ஹெச்.ராஜா உள்ளிட்ட பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களும் பங்கேற்றனர்.
வேல் யாத்திரை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள நசரத்பேட்டைக்கு வந்தபோது தடுத்து நிறுத்திய போலீசார், திருத்தணி கோயிலுக்கு எல்.முருகனுடன் ஐந்து வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதியளித்தனர். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எல்.முருகன், "தமிழகம் முழுவதும் திட்டமிட்டப்படி வேல் யாத்திரை நடக்கும்" என்றார்.
அதைத் தொடர்ந்து, யாத்திரை பயணத்தைத் தொடங்கிய எல்.முருகன் கையில் வேலுடன் திருத்தணியில் உள்ள முருகன் கோயிலுக்கு சென்றடைந்தார். பின்பு திருத்தணி முருகன் கோயிலில் எல்.முருகன் சாமி தரிசனம் செய்தார்.
அதைத் தொடர்ந்து, வேல் யாத்திரையை தொடங்க எல்.முருகன் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில் திருத்தணியில் தடையை மீறி பா.ஜ.க. தொடங்கிய வேல் யாத்திரையைத் தடுத்து நிறுத்திய போலீசார், தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் மற்றும் அண்ணாமலை உள்ளிட்ட நிர்வாகிகளை கைது செய்து பேருந்தில் அழைத்து சென்றனர்.
பா.ஜ.க.வின் வேல் யாத்திரையைத் தடுக்க திருத்தணியில் ஆறு மாவட்டங்களைச் சேர்ந்த 1000- க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, பா.ஜ.க.வின் வேல் யாத்திரைக்கு அனுமதி அளிக்கக்கோரி தமிழகத்தில் திருவள்ளூர், திருவண்ணாமலை, கரூர், திருச்சி, நாமக்கல், நாகை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.