பள்ளி மாணவர்களிடையே அறிவியல் படிப்புகளின் மீது ஆர்வத்தைத் தூண்டும் நோக்கில், ஆண்டுதோறும் தேசிய அளவில் திறனாய்வுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. மொத்தம் இரண்டு நிலைகளில் இத்தேர்வு நடத்தப்படுகிறது. முதல்நிலைத் தேர்வு மாநில அளவிலும், இரண்டாம் நிலைத்தேர்வு தேசிய அளவிலும் நடத்தப்படும். இதில், நிர்ணயிக்கப்பட்ட கட்ஆப் மதிப்பெண்களுக்கு மேல் பெறக்கூடிய மாணவர்களுக்கு அவர்கள் பிளஸ்1, பிளஸ்2 படிப்பைத் தொடரும்போது, மாதந்தோறும் 1250 ரூபாய் உதவித்தொகையும், இளநிலை, முதுநிலை படிப்புகளின்போது மாதம் 2000 ரூபாய் உதவித்தொகையும் வழங்கப்படும்.
நடப்பு 2019-2020ம் கல்வி ஆண்டில் அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் எஸ்எஸ்எல்சி பயிலும் மாணவர்கள், வரும் நவம்பர் மாதம் 3ம் தேதி நடைபெற உள்ள தேசிய திறனாய்வுத் தேர்வுக்கு (என்டிஎஸ்இ) விண்ணப்பிக்கலாம் என அரசுத்தேர்வுகள் துறை இயக்ககம் அறிவித்துள்ளது. விண்ணப்பங்களை, www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் 22.8.2019ம் தேதி முதல் வரும் செப்டம்பர் 7ம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் 50 ரூபாய் தேர்வுக்கட்டணம் சேர்த்து, சம்பந்தப்பட்ட பள்ளித்தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 7.9.2019. மேலும் விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அரசுத்தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.