தாய் யானையை பிரிந்த குட்டி யானை யானை கூட்டத்துடன் சேர்த்து வைக்கும் முயற்சியை வனத்துறை கைவிட்டது. சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனச்சரகத்திற்குட்பட்ட பவாளக்குட்டை வனப்பகுதியில் சென்ற செப்டம்பர் மாதம் 26 ம் தேதி 3 மாதமே ஆன பெண்யானைக்குட்டி ஒன்று வனத்தை விட்டு வெளியேறி வந்து அருகே உள்ள விளைநிலங்களில் சுற்றித்திரிந்தது.
இந்த தகவல் அறிந்த வனத்துறையினர் அந்த குட்டியானையை பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு சென்றுவிட்டனர். ஆனால் குட்டியானை தனது தாய் யானையுடன் சேராத நிலையில் ஆசனூர் வனப்பகுதியில் சென்ற அக்டோபர் 3 ம் தேதி வனச்சாலையில் சோகத்துடன் சுற்றித்திரிந்ததை கண்டனர் வனத்துறையினர். மீண்டும் அந்த குட்டியானையை மீட்டு பவானிசாகர் அருகே உள்ள காராச்சிக்கொரை வன கால்நடை மையத்திற்கு கொண்டு வந்தனர் வனத்துறை ஊழியர்கள்.
அங்கு குட்டியானையை பரிசோதித்த வனத்துறை கால்நடை மருத்துவர் அசோகன் தினமும் 15 லிட்டர் லேக்டோஜென் பால் கொடுத்து பராமரித்து வந்தார். பெண் யானைக்குட்டிக்கு செல்லமாக அம்முக்குட்டி என பெயரிட்டனர். இந்நிலையில் குட்டியானையை வனப்பகுதியில் உள்ள யானைக்கூட்டத்துடன் சேர்க்குமாறு வனத்துறை உயரதிகாரிகள் உத்தரவிட்டதை தொடர்ந்து மீண்டும் அக்டோபர் 9 ம் தேதி வனத்துறையினர் யானைக்குட்டியை பண்ணாரி அருகே உள்ள பேலாரி வனப்பகுதிக்கு கொண்டு சென்று குட்டிகளுடன் சுற்றும் யானைக்கூட்டத்தை பார்த்து அம்முக்குட்டி யானையை அவர்களோடு சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் யானைக்குட்டியை வனப்பகுதியில் உள்ள யானைக்கூட்டத்துடன் சேர்ப்பது குறித்து வனத்துறையினர் எந்த தகவலையும் வெளிப்படையாக தெரிவிக்காததால் அம்முக்குட்டி யானை என்ன நிலையில் உள்ளது என்பதை அறியமுடியவில்லை என்று சென்னையை சேர்ந்த முரளிதரன் என்பவர் அம்முக்குட்டி யானையை யானைக்கூட்டத்துடன் சேர்ப்பதற்காக கொண்டு சென்ற நிலையில் என்ன நடவடிக்கை எடுத்துள்ளனர், தற்போது அம்முக்குட்டி யானையின் நிலையில் உள்ளது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழங்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதிகள் அம்முக்குட்டி யானை குறித்து வனத்துறை அதிகாரிகள் விளக்கமளிக்க உத்தரவிட்டனர். இந்நிலையில் வனத்துறையினர் நேற்று அதிகாலை அம்முக்குட்டியானையை வாகனத்தில் ஏற்றி கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர், குண்டல்பேட்டை வழியாக நீலகிரி மாவட்டம் முதுமலையில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு கொண்டு சென்றனர். தாய் யானையிடமிருந்து பிரிந்து வந்த குட்டியானை மற்ற யானைக்கூட்டத்துடன் சேர்க்க இயலாது என வனவிலங்கு ஆர்வலர்கள் கருத்து தெரிவித்த நிலையில் அம்முக்குட்டி யானையை யானைக்கூட்டத்துடன் சேர்க்கும் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.
இதுகுறித்து சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் துணை இயக்குநர் அருண்லால் கூறும்போது, யானைக்குட்டியை இயல்பாக வனப்பகுதியில் மற்ற யானைக்கூட்டங்களுடன் சேர்த்து வனப்பகுதியில் விடுவதற்காக தொடர் முயற்சி மேற்கொண்டோம். இது ஒரு பரீட்சார்த்த முயற்சிதான். ஆனால் 14 நாட்கள் முயற்சித்தும் யானைக்குட்டியை யானைக்கூட்டத்துடன் சேர்க்கும் முயற்சி பலனளிக்கவில்லை. இதையடுத்து உயரதிகாரிகளின் உத்தரவின்பேரில் குட்டியானையை நீலகிரி மாவட்டம் தெப்பக்காடு முகாமுக்கு கொண்டு போய் வைத்துள்ளோம். தற்போது குட்டியானை நல்ல உடல்நலத்துடன் உள்ளது என்றார்.
காட்டில் பிறந்த அம்முக்குட்டி இனி நாட்டில் உலா வரும்.