திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்திகிராம பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள பிரதமர் நரேந்திர மோடி, 11ம் தேதி தமிழகம் வருகிறார். அதன் காரணமாக பாதுகாப்பு மற்றும் வரவேற்புப் பணிகளை தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தமிழகத்தின் புகழ்பெற்ற பல்கலைக்கழகமான காந்திகிராம கிராமிய நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் வரும் நவம்பர் 11ல் நடக்கும் பல்கலையின் 36வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின், மத்திய கல்வி அமைச்சர் உட்பட அரசியல் கட்சி பிரமுகர்கள் பலர் பங்கேற்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் பல்கலை பதிவாளர் வி.பி.ஆர்.சிவக்குமார் தலைமையில் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. நேற்று காந்திகிராம பல்கலைக்கழக ஹெலிபேடு தளத்திற்கு வந்த தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, பிரதமர் வந்து இறங்கும் ஹெலிபேடு மற்றும் அவருடைய வாகனம், பட்டமளிப்பு விழா அரங்கத்திற்குச் செல்லும் பாதைகளை ஆய்வு செய்தார்.
அதன்பின்னர் விழா அரங்கத்திற்குச் சென்று பார்வையிட்டதோடு பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஆலோசனை செய்தார். அதன்பின்னர் வெளியே வந்த தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, “பல்கலைக்கழக நிர்வாகம், பாரத பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கான ஏற்பாடுகளைச் சிறப்பான முறையில் செய்துள்ளது. பாதுகாப்புப் பணிகளும் சிறப்பாக உள்ளது” எனப் பாராட்டினார். ஆய்வின்போது மாநில பொதுச் செயலாளர் இராம. சீனிவாசன், முன்னாள் தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா, மாநில துணைத்தலைவர் கருப்பு முருகானந்தம் உட்பட பா.ஜ.க. நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.