கரோனா தொடர்பான கேள்விக்கு தமிழக அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த பதில் பொறுப்பற்றது என உ.பி மாநில அமைச்சர் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கரோனா பெருந்தொற்று கடந்த இரண்டு வருடங்களாக மக்களை வாட்டி வதைத்த நிலையில் கடந்த சில மாதங்களாக அதன் தாக்கம் குறைந்துள்ளது. லட்சக்கணக்கில் தினசரி தொற்று பாதிப்பு இருந்து வந்த நிலையில், தற்போது அது பெருமளவு குறைந்துள்ளது. தமிழகத்திலும் தொற்று எண்ணிக்கை கடந்த சில மாதங்களாக இரண்டு இலக்கத்திலேயே இருந்து வருகிறது. இந்நிலையில் சில நாட்களாகத் தொற்று எண்ணிக்கை சென்னையை ஒட்டிய மாவட்டங்களில் அதிகரித்துக் காணப்படுவதாகத் தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் இதுதொடர்பாக பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தமிழகம் வருவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்திருந்தார்.
அமைச்சரின் இந்த கருத்து விவாதத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில் உ.பி-யை சேர்ந்த அமைச்சர் ஜிதின் பிரசாதா அமைச்சரின் இந்த கருத்துக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறும்போது, " கரோனா நோய்த்தொற்று மாநில எல்லைகளைக் கடந்தது என்று நாம் ஏற்கனவே அனுபவப்பூர்வமாக உணர்ந்துள்ளோம். எனவே தமிழக அமைச்சரின் கருத்து மிகவும் பொறுப்பற்றது. தேவையில்லாத விவாதத்தை அது ஏற்படுத்தும்" என்று தெரிவித்துள்ளார்.