சீமான் மீதான வழக்கை விரைந்து விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த 2010 ஆம் ஆண்டு தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் ஒன்றை நடத்தி இருந்தார். அப்பொழுது இரு பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்படுத்தும் வகையிலும் இறையாண்மைக்கு எதிராகவும் பேசியதாக தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டிருந்தார்.
கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளியே வந்த சீமான் மீது 2018 ஆம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கலானது. இந்த வழக்கானது சென்னை ஜார்ஜ் டவுன் தற்போது வரை நிலுவையில் உள்ளது. தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என கடந்த 2021 ஆம் சென்னை உயர்நீதிமன்றத்தில் சீமான் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியன், ஜோதிராம் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
காவல்துறை சார்பில் ஆஜரான குற்றவியல் வழக்கறிஞர் 'இவ்வழக்கில் 13 சாட்சியங்களிடம் விசாரணை நடைபெற்றுள்ளது.எனவே வழக்கை ரத்து செய்யக் கூடாது' என வாதிட்டார். சீமான் தரப்பிலான வழக்கறிஞர் சங்கர் 'சாட்சி விசாரணை தொடங்கியதால் ரத்து செய்ய வேண்டும் என தங்கள் தரப்பு தொடர்ந்த இந்த வழக்கைத் திரும்பப் பெறுகிறோம்' என அறிவித்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் 'சீமான் மீதான இந்த வழக்கை எவ்வளவு விரைந்து விசாரிக்க முடியுமோ அவ்வளவு விரைந்து விசாரிக்க வேண்டும்' என உத்தரவிட்டனர்.