Skip to main content

ஐந்து நாள் கழித்து சென்று ஐந்து நிமிட ஆய்வு செய்த எடப்பாடி பழனிசாமி

Published on 20/11/2018 | Edited on 20/11/2018
pudukkottai



கஜா புயலால் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளன. ஐந்து நாட்களுக்குப் பிறகு சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானம் மூலம் சென்ற முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுக்கோட்டைக்குச் சென்றார். சேதமடைந்த இடங்களை அவர் ஆய்வு செய்வார் என்று இருந்த நிலையில் ஒரு சில இடங்களை அவர் பார்வையிட்டார்.


புதுக்கோட்டையில் ஐந்து நிமிடத்தில் முடிந்த அவரது ஆய்வின்போது, அவரது கட்சியினர் சிலரை மட்டும் சந்தித்து நிவாரணப் பொருட்களை வழங்கிவிட்டு திரும்பியுள்ளார் என்று அப்பகுதியில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், மாப்பிள்ளையார்குளம், மச்சுவாடி உள்ளிட்ட இடங்களில் மட்டும் எடப்பாடிபழனிசாமி ஆய்வு செய்தார். அதிகம் பாதிக்கப்பட்ட கிராமங்களில் ஒன்றைக்கூட ஆய்வு செய்யவில்லை என்றும் குற்றம் சாட்டினர்.

 

pudukkottai


மாப்பிள்ளையார்குளத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஒரு மூதாட்டி, எந்த அதிகாரியும் எங்களை வந்து பார்க்கவில்லை. என் வீட்டின் மீது மின்கம்பம் சாய்ந்து கிடக்கிறது. அதனை கீழே இறக்கிக்கூட போடவில்லை. ஐந்து நாள் ஆகிறது. ஐந்து நாள் கழித்து முதல் அமைச்சர் பார்க்க வருவதாக சொன்னார்கள். வந்தவர் அங்கேயே பார்த்துவிட்டு திரும்பி போய்விட்டார். எங்களை பார்க்க போலீசார் அனுமதிக்கவில்லை. எங்களால் எட்டிக்கூட பார்க்க முடியாத சூழ்நிலையில் இருந்தோம். இன்று ஆளும் கட்சி, ஆளாத கட்சி என்று கிடையாது. மக்கள் அனைவரும் கஷ்டப்படுகிறோம். ஆளும் கட்சி கவுன்சிலர் சிபாரிசின் பேரில் 30 பேரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு மட்டும் நிவாரணம் கொடுத்திருக்கிறார்கள். நாங்கள் என்ன பாவம் பண்ணினோம். ஓட்டு நாங்களும் போட்டோம். எங்களுக்கும் அவர்கள் செய்தால் என்ன என்றார். 

செய்தியாளர்களிடம் பேசிய அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர், அதிகாரிகளும் அமைச்சர்களும் எடப்பாடியைத்தான் கவனிக்கின்றனர். எடப்பாடி வருகிறார் என்று ஒரு மணி நேரத்திற்கு மேலாக எங்களை ரோட்டில் நடக்கவிடவில்லை. கயிறை கட்டி மறைத்து நிற்கின்றனர் போலீசார். அவர்களை தாண்டி எங்களால் போக முடியுமா? அதிகார துஷ்பிரயோகம் செய்கின்றனர். மக்களை அவர்கள் நினைக்கவில்லை. பாதுகாக்கவில்லை. 

மாப்பிள்ளையார்குளத்தைச் சேர்ந்த மற்றொரு மூதாட்டி, ரொம்ப கஷ்டப்படுகிறோம். பச்சை குழந்தைகளை கையில் வைத்துக்கொண்டு தவிக்கிறோம். ரேஷன் அரிசிக்குக் கூடவழியில்லை. புயலால் பாதிக்கப்பட்டு கஷ்டப்படுவது நாங்கள். எங்களை சந்திக்காமல் சென்றிருக்கிறார். பின்னர் எதற்காக இங்கு வந்தார் என்றார். 

 

சார்ந்த செய்திகள்