மத்திய அரசால் கடந்த செப்டம்பர் 2023-ல் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் பிரதமரின் விஸ்வகர்மா திட்டம். நாடு முழுவதும் உள்ள கைவினைஞர்கள் மற்றும் கைவினைஞர்களுக்கு விரிவான உதவிகளை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட மத்திய அரசின் முன் முயற்சி திட்டம் என மத்திய அரசு அறிவித்திருந்தது. கைவினைஞர்கள் மற்றும் கைவினைஞர்களின் இந்து கடவுளான விஸ்வகர்மாவின் நினைவாக இந்த திட்டத்திற்கு 'பிரதமரின் விஸ்வர்கமா யோஜனா' என பெயரிடப்பட்டது.
'விஸ்வகர்மா திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தாது' என தமிழக முதல்வர் திட்டவட்டமாக நேற்று தெரிவித்திருந்தார். இது குறித்து மத்திய அமைச்சர் ஜிதன் ராம் மஞ்சிக்கு தமிழக முதல்வர் நேற்று கடிதம் ஒன்றைஎழுதி இருந்தார்.அந்த கடிதத்தில், 'பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் சாதி அடிப்படையிலான தொழில் முறையை வெளிப்படுத்துகிறது. எனவே பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை தற்போதைய தமிழ்நாடு அரசு செயல்படுத்தாது. விஸ்வகர்மா திட்டத்தை ஆராய தமிழ்நாடு அரசின் சார்பில் குழு அமைக்கப்பட்டு விரிவான ஆய்வு செய்யப்பட்டது. திட்டத்தில் மாற்றம் செய்திட மத்திய அரசுக்கு பரிந்துரைத்து அதனை பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வந்தோம். ஆனால் மத்திய அரசு அளித்த பதிலில் பரிந்துரைக்கப்பட்ட திருத்தங்கள் குறிப்பிடப்படவில்லை. எனவே தமிழ்நாட்டுக்கென விரிவான திட்டம் ஒன்றை உருவாக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. சமூக நீதி அடிப்படையில் சாதி பாகுபாடு இல்லாமல் கைவினை கலைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் புது திட்டத்தை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது' என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனிடம் செய்தியாளர்கள் முதல்வரின் கடிதம் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''கைவினைக் கலைஞர்களின் வாழ்வை முடக்க பார்க்கிறார் தமிழக முதல்வர். விஸ்வகர்மா திட்டத்தால் சமூகநீதி பாதிக்கப்படும் எனக் கூறி கைவினை கலைஞர்களின் வாழ்வை முடக்குவதற்கு நடத்தப்படும் முயற்சியாகவே இது பார்க்கப்படுகிறது. காவி என்பது பாஜகவுக்கு மட்டும் சொந்தமான நிறம் அல்ல; அது நாட்டின் பாரம்பரியம்'' என தெரிவித்துள்ளார்.
நேற்று மதுராந்தகத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற மாவீரர் நாள் கூட்டத்தில் பேசிய சீமான் 'ரஜினிகாந்த் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்றால் அரசியலில் நாம் தமிழர் கட்சி தான் சூப்பர் ஸ்டார்' என பேசியிருந்தார். அது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த வானதி ஸ்ரீனிவாசன், ''சூப்பர் ஸ்டார் பட்டம் என்பது அவரவர்களே கொடுத்துக் கொள்ளக் கூடாது. சிறந்த தலைவர் என பிரதமர் மோடிக்கு உலக நாடுகள் பட்டமளிப்பதால் அவர்தான் சூப்பர் ஸ்டார்'' என்றார்.