சிதம்பரத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் வரும் 5-ந்தேதி நடைபெறும் விவசாயிகள் முற்றுகை போராட்டம் குறித்து இரு அமைப்பினரும் இன்று ஆலோசனை கூட்டம் நடத்தினர். இக்கூட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பிரகாஷ் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் மாநில பொருளாளர் கே.பி.பெருமாள், மாவட்ட செயலாளர் கோ.மாதவன், மாவட்ட பொருளாளர் எஸ்.தஷ்ணமூர்த்தி, மாவட்ட துணைத்தலைவர் ராமச்சந்திரன், கற்பனை செல்வம் சதானந்தம், மாவட்ட இணைச்செயலாளர் ஆர்.கே.சரவணன் மூர்த்தி, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட பொருளாளர் செல்லையா, மாவட்ட துணைத்தலைவர் ஜெயகுமார், இணைச் செயலாளர்கள் ரமேஷ் பாபு, கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட குழு தமிழரசன், வைத்திலிங்கம், சுப்பிரமணியம், நெடுஞ்சேரலாதன், விவசாய சங்க மாவட்ட குழு உறுப்பினர்கள் காளி, கோவிந்தராஜன், தர்மதுரை, செல்வகுமார், கணேசன், கொளஞ்சி, முருகன், மெய்யழகன், பாண்டுரங்கன், அண்ணா துரை, கணேசன், சரவணன், அஞ்சலை, மணி, தமிழரசன் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
"சம்பா சாகுபடிக்குத் தேவையான அனைத்து இடங்களிலும் காலதாமதமின்றி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க வேண்டும், ஆன்லைன் பதிவு முறையை ரத்து செய்ய வேண்டும், தமிழகத்தில் தொடர் மழையால் சேதமடைந்த உள்கட்டமைப்புகளைப் புனரமைக்க ஒன்றிய அரசு 6230 கோடி ரூபாயை வழங்க வேண்டுமென்ற தமிழக அரசின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும், கடலூர் மாவட்டத்தில் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களைக் கணக்கெடுப்பு நடத்தி ஏக்கருக்கு 30 ஆயிரம் நெல் பயிருக்கு வழங்கிட வேண்டும், மணிலா, உளுந்து, மக்காச்சோளம், பருத்தி, மரவள்ளி உள்ளிட்ட பயிர்களுக்கும் காய்கறிகள் தோட்டப் பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கிட வேண்டும், மழையால் சேதமடைந்த நிலங்களைச் சரிப்படுத்த வேண்டும், கடலூர் மாவட்டத்தில் உயிரிழந்த ஆடுகள், மாடுகள், கோழிகள் உள்ளிட்ட கால்நடைகளைக் கணக்கெடுப்பு நடத்தி நிவாரணம் வழங்கிட வேண்டும், கோமாரி நோயால் இறந்த கால்நடைகளைக் கணக்கெடுப்பு நடத்தி நிவாரணம் வழங்கிட வேண்டும், அமெரிக்கப் படைபுழுவால் பாதிக்கப்பட்ட பயிர்களைக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.
தொடர் மழையால் வேலையின்றி தவிக்கும் விவசாயத் தொழிலாளிக்கு 10,000 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும், தண்ணீர் சூழ்ந்த வீடுகளுக்கு ரூபாய் 5000 வழங்கிட வேண்டும், மாவட்டம் முழுவதும் சேதமடைந்த சாலைகள் மற்றும் பாலங்களைச் சீர்படுத்த வேண்டும், தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தவர்களுக்கு, சுவர் இடிந்து உயிரிழந்தவர்களுக்கு ரூ 10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும், மஞ்சள் நோயால் பாதிக்கப்பட்ட நெல் பயிர்களைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்" உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தித் தமிழகம் முழுவதும் ஜனவரி 5 ஆம் தேதி முதல் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் நடைபெறுகிறது. கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்துவது என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.