சிதம்பரத்தில் தமிழ் பேரரசு கட்சியின் தலைவர் இயக்குனர் கௌதமன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், தமிழ்நாட்டுக்கு அமித்ஷா வருகை தந்தது அரசு விழாவில் அதிமுக- பாஜக சம்பந்தம் செய்து கொள்வதற்காக வந்துள்ளார். வரும் சட்டமன்ற தேர்தலில் எத்தனை சீட்டுகள் பாஜகவுக்கு ஒதுக்க வேண்டும். அது எந்தெந்த இடம் என முடிவு செய்வதற்காகவே அவரை வரவழைத்து அரசு நிகழ்ச்சியில் கூட்டணி குறித்து அறிவிக்கிறார்கள். இது மரபை மீறிய செயல்.
அதிமுக அடிமை ஆவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. அதேநேரத்தில் தமிழ்நாட்டு மக்களை அடிமையாக்க கூடாது. இதனை தமிழ் பேரரசு கட்சி உள்ளிட்ட தமிழ்நாட்டு மக்கள் அனுமதிக்கமாட்டார்கள்.
அரசுப் பள்ளியில் இட ஒதுக்கீட்டில் மருத்துவம் படிக்க வரும் மாணவர்களுக்கு அரசு கல்லூரியில் தான் இடம் கொடுக்க வேண்டும். அதேநேரத்தில் அவர்களுக்கு பொதுமருத்துவம் கொடுக்காமல் பல்மருத்துவ இடம் கொடுக்கப்படுகிறது. இது கண்டிக்கத்தக்கது. தமிழக கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும் என தமிழக பேரரசு கட்சி சார்பில் வலியுறுத்தி சென்றால் எங்களை உடனடியாக கைது செய்கிறீர்கள். ஆனால் பாஜக முருகன் வேலை தூக்கிக்கொண்டு பலமுறை உயர்நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் போராட்டம், யாத்திரை என தொடர்ந்து செய்கிறார்கள். ஏன் அவர்களை கைது செய்யவில்லை? அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை? வேல் யாத்திரை ஆன்மிக யாத்திரை இல்லை, வேல் ஒரு ஆயுதம் ஆயுதம் என உயர்நீதிமன்றம் பலமுறை எச்சரித்தும் அவர்கள் தொடர்ந்து வேலை தூக்கிக்கொண்டு யாத்திரையில் ஈடுபடுகிறார்கள். அவர்கள்மீது மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீதியரசர்கள் இதனைத் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்து தீர்ப்பை மீறி பாஜகவினர் செயல்படுவதற்கு நடவடிக்கை ஏன் எடுக்கவில்லை. நீதிமன்றம் சரியாக செயல்படுகிறதா? என்றார்.
இன்னும் நீதிமன்றத்தை நாங்கள் மதிக்கிறோம் நம்புகிறோம். சிதம்பரம் நடராஜர் கோவில் பெருமைவாய்ந்த ஒரு வரலாற்று சிறப்புமிக்க தமிழர் கோயில். இதில் சமஸ்கிருதத்தில் கோவில் பெயர் எழுதப்பட்டுள்ளது. தமிழ் மொழியில் பெயர் எழுத நடவடிக்கை எடுக்கவேண்டும். கருவறையில் தமிழ் ஒலிக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் அனைத்து தமிழ் ஆர்வலர்களையும்,பொது மக்களையும் ஒருங்கிணைத்து மிகப்பெரிய போராட்டத்தை தமிழ் பேரரசு கட்சி நடத்தும் என்றார். இவருடன் கட்சியின் கடலூர் மாவட்ட செயலாளர் புகழேந்தி உள்ளிட்ட கட்சியினர் உடனிருந்தனர்.