Skip to main content

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வதில் திடீர் சிக்கல்!

Published on 14/09/2018 | Edited on 14/09/2018


ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 27 வருடங்களுக்கு மேலாக சிறையில் உள்ள பேரறிவாளன், முருகன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்ற தமிழக அரசின் பரிந்துரை அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தமிழக ஆளுநர் நேற்று அனுப்பி வைத்தார். இதனால் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வதில் திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரும் 27 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளனர். இவர்களை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனாலும், மத்திய அரசு இவர்களை விடுதலை செய்வதில் தயக்கம் காட்டியது. இது சம்பந்தமான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்நிலையில், கடந்த 7ம் தேதி உச்சநீதிமன்றம், `ராஜிவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகளை விடுதலை செய்வது குறித்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு முழு அதிகாரம் உண்டு என்றும் தமிழக அரசின் பரிந்துரை அடிப்படையில் 7 பேரின் விடுதலை தொடர்பாக ஆளுநரே முடிவு எடுக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

இதையடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அமைச்சரவை கூட்டப்பட்டு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்பட 7 பேரை `முன் விடுதலை செய்ய வேண்டும்’ என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உடனடியாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த கடிதத்தை பெற்றுக்கொண்ட தமிழக ஆளுநர், ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரை விடுதலை செய்வதற்கான அறிவிப்பை உடனடியாக வெளியிடுவார் என்று பரவலாக கருத்து நிலவியது.

இந்தநிலையில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேர் விடுதலை குறித்த தமிழக அமைச்சரவையின் பரிந்துரை அறிக்கையை நேற்று மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்துள்ளதாக ஆளுநர் மாளிகையை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியானது. அமைச்சரவையின் பரிந்துரை தொடர்பாக சட்ட வல்லுநர்களிடம் நீண்ட ஆலோசனை நடத்திய பின்னரே ஆளுநர் பன்வாரிலால் புரோகித், மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை தாக்கல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

சார்ந்த செய்திகள்