வேலூர் மாவட்டத்தை மூன்றாக பிரிப்பதாக தமிழக அரசு சமீபத்தில் அறிவித்தது. அதற்கான மக்கள் கருத்து கேட்பு கூட்டம் வேலூர் அடுத்த அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்திலும், வாணியம்பாடி அருகில் உள்ள தனியார் மகளிர் கல்லூரி வளாகத்திலும் நடைபெற்றது. வாணியம்பாடி பகுதியில் நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில் 200- க்கும் குறைவான மக்களே கலந்துக்கொண்டதால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
தமிழக வருவாய் நிர்வாக ஆணையரும், கூடுதல் தலைமை செயலாளருமான சத்யகோபால் தலைமையில் மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் ஆகஸ்ட் 29ந்தேதி காலை, மாலை என இரு வேளைகளில் நடைபெற்றது. அதற்கு முன்னதாக மக்கள் பிரதிநிதிகளிடம் கருத்துக்களை கேட்டனர்.
வேலூர் மாவட்டத்தை இரண்டாக பிரிப்பதே சரியானதாக இருக்கும், மூன்றாக பிரிப்பது என்பது தேவையற்றது என மக்கள் கருத்துக்களை கூறினர். வேலூர் மாவட்டத்தில் 13 தொகுதிகள் உள்ளன. இந்த மாவட்டத்தை பிரிப்பது தொகுதிகளின் அடிப்படையிலா? வருவாய் கோட்டங்களின் அடிப்படையிலா? என கேள்விகளை எழுப்பினர். மாவட்டம் பிரிப்பதால் தேவைப்படும் வசதிகள் குறித்தும், மாவட்ட தலைநகரம் எங்கு அமைய வேண்டும் என்பன குறித்தும் மக்கள் தங்களது கருத்துக்களை அதிகாரிகளுக்கு எடுத்துரைத்தனர்.
கருத்து கேட்பு கூட்டத்திற்கு பிறகு வருவாய் நிர்வாக ஆணையாளர் சத்யகோபால் செய்தியாளர்களிடம் சந்தித்து பேசினார். அப்போது மாவட்டத்தை பிரிப்பது வருவாய் கோட்டங்களின் அடிப்படையிலா? தொகுதிகளின் அடிப்படையிலா? என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை. மக்களிடம் கருத்து கேட்டு பின்னர் அதுப்பற்றி முடிவு எடுக்கப்படும். தற்போதைய நிலையில் 335 மனுக்கள் வந்துள்ளன. அதில் உள்ள கருத்துக்கள் கவனத்தில் கொள்ளப்படும் என்றார்.
மக்களிடம் கருத்து கேட்பதில் பாரபட்சம் காட்டப்பட்டது. கருத்து கேட்பு கூட்டத்திற்கு பங்கேற்க பதிவு செய்தவர்கள் மட்டும் தான் பேச வேண்டும் என்றார்கள். ஆனால், பதிவு பெற்றவர்களில் செலக்ட் செய்து பேச வைத்தார்கள் அதிகாரிகள் என்கிற குற்றம் சாட்டுகின்றனர் பொதுமக்கள்.
அதோடு, வேலூர் மற்றும் வாணியம்பாடியில் நடைபெற்ற மக்கள் கருத்து கேட்கும் கூட்ட அரங்கில் 200- க்கும் குறைவான பொதுமக்களே வந்துயிருந்தனர். இதனால் அதிகாரிகளே அதிர்ச்சியாகிவிட்டனர். ஏன் பொதுமக்கள் வந்து தங்களது கருத்துக்களை தெரிவிக்கவில்லை என விவாதித்துள்ளனர். இந்நிலையில் ஆகஸ்ட் 30ந்தேதி, மேல்விசாத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெறுகிறது.