
தஞ்சாவூர் மாவட்டம் ஊரணிபுரம் அருகில் உள்ள வெட்டுவாக்கோட்டை ராமா புரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் - கலா தம்பதி. இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மூத்த மகளுக்கு கடந்த மாதம் திருமணமாகிய நிலையில் மகன் கல்லூரியிலும், கடைசி மகள் அரசுப் பள்ளியில் 12 ஆம் வகுப்பும் படித்து வருகிறார்.
ராஜேந்திரன் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் அவரது மனைவி கலா கூலி வேலை செய்து பிள்ளைகளை படிக்க வைத்து குடும்ப பாரத்தை தன் மீது சுமந்துள்ளார். நாம் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் நம் குழந்தைகள் படிக்க வேண்டும், படிப்பு மட்டுமே அவர்களுக்கு நாம் சேர்த்து வைக்கும் சொத்து என்று கூறும் தாய் கலா, தன் மகள் பள்ளிக்குச் செல்லும் போதெல்லாம் அதையே சொல்லி அனுப்புவதை வழக்கமாக வைத்திருந்துள்ளார்.
12 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று வரும் நிலையில், ஒவ்வொரு தேர்வுக்குச் செல்லும் முன்பு தாய் கலாவின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டு அவரது கையால் விபூதி பூசிக்கொண்டு காவியா தேர்வுக்குச் செல்வாராம். பின்பு விடு திரும்பியதும், தேர்வு எப்படி எழுதியிருக்க என்று விசாரித்துவிட்டுப் படிப்பை மட்டும் விட்றாத என்று கலா தன்னம்பிக்கை கொடுப்பாராம்.

இந்த நிலையில் நேற்று தனது மூத்தமகளுக்கு தாலி பெருக்கும் விழாவை முடித்துவிட்டு தாய கலா இரவு வீட்டில் தூங்கியுள்ளார். ஆனால், இன்று(18.3.2024)அதிகாலை தாய் கலாவிற்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த காவியா கதறி அழுதுள்ளார். உயிரியல் தேர்வு எழுதும் தனது மகளை ஆசிர்வதித்து அனுப்பி வைக்க வேண்டிய தாய் கலா சடலமாக கண்ணாடிப் பெட்டியில் கிடத்தப்பட்டிருந்ததைப் பார்த்து மகள் காவியா மிகுந்த வேதனையடைந்தார். பின்பு, தாயின் காலடியில் நின்று கதறி அழுது காலை தொட்டுக் கும்பிட்டுவிட்டு, ‘எப்பவும் போல நான் உன் கால தொட்டுக் கும்பிட்டுவிட்டேன். நீ எப்பவும் எனக்கு திருநீறு பூசுவியே, அதுபோல இப்பாவும் பூசிவிடும்மா..’ என்று கதறி அழுதபடியே காத்திருந்த தோழிகளுடன் தேர்வுக்குச் சென்றார்.
‘இதுவரை தாய் கலா உழைத்துப் படிக்க வைத்தார் இனிமேல் அவர் இல்லை. தந்தையும் மனநலம் குன்றியவர் இனிமேல் யார் காவியாவையும் அவரது அண்ணனையும் படிக்க வைப்பது. இந்த குழந்தைகள் எப்படி தாயின் இழப்பை ஏற்றுக் கொள்ளப் போகிறார்கள். காவியா நிச்சயம் தன் தாயின் கல்வி கனவை நிறைவேற்றுவார்’ என்கின்றனர் சக மாணவிகள்.