திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த நீலந்தாங்கல் கிராமத்திலுள்ள ஏரியில் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக மார்ச் 10ஆம் தேதி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு வேட்டவலம் போலீஸார், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சிவனுபாண்டியன், டி.எஸ்.பி அறிவழகன் நேரில் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், கொலை செய்யப்பட்டவன் புதுச்சேரி வாணரப்பேட்டையை சேர்ந்த ரவுடி ஐயப்பன் எனத் தெரியவந்தது. குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
சிறையிலுள்ள புதுச்சேரி பிரபல தாதா மர்டர் மணிகண்டனின் வலதுகரமாக இருந்து சிறையிலிருந்தபடியே மணிகண்டன் சொல்லும் வேலைகளை, வெளியே கச்சிதமாக முடித்துவந்தவன் ஐயப்பன். இவன் மீது 3 கொலை வழக்குகள் உட்பட 17 வழக்குகள் உள்ளன. வாணரப் பேட்டையில் மற்றொரு தாதா பாம் சரவணன் படுகொலை செய்யப் பட்டான். அதற்கு ஐயப்பன் தான் காரணமென அவனது ஆட்கள் இவனை டார்கெட் செய்ய, அங்கி ருந்து வீடு மாறி ரெட்டியார் பாளையத்தில் பிரமாண்டமான பங்களா கட்டி குடிவந்து விட்டான். சமீபத்தில் ஐயப்பனின் குழந்தையின் பிறந்தநாளுக்கு, முக்கிய அரசியல் பிரபலங்கள் பலரும் அவன் வீட்டில் ஆஜராகிக் கொண்டாடியுள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்த ஐயப்பனால், புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை வருகிறது என 144 தடை உத்தரவு போட்டு, ஊருக்குள் வரக்கூடாதென்று போலீஸ் தடுத்தது. இதனால் தனது மனைவியின் பூர்வீகமான திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலத்தில் வந்து தங்கியுள்ளான்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/tmalai-murder.jpg)
ஐயப்பனிடம் அவனது நெருங்கிய நண்பர்களான புதுச்சேரி ஐய்யங்குட்டி பாளையம் முத்துகுமார், நடராஜ், லாஸ்பேட்டை சந்துரு ஆகியோர் மூன்று லட்சம் ரூபாய் பணம் வாங்கியுள்ளனர். அந்த பணத்தைத் தராமல் இழுத்தடித் துள்ளனர். மார்ச் 9ஆம் தேதி வழக்கம்போல் ஐயப்பன் வேலையாம்பாக்கம் கிராமத்தில் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தபோது சந்துரு மற்றும் முத்துக்குமார் டீம், வேலையாம்பாக்கத்திற்கு இன்னோவா காரில் வந்து ஐயப்பனை கத்தி முனையில் கடத்தியுள்ளனர். அப்படி வரும் போது, ஐயப்பனின் மனைவியை முத்துக்குமார் தொடர்புகொண்டு, "உன் கணவன் என் கட்டுப்பாட்டில் தான் இருக்கான், 3 லட்சம் தந்தனுப்பு, இல்லன்னா அவ்ளோ தான்'' என மிரட்டியுள்ளான். கணவனின் உயிரைக் காப்பாற்ற சதீஷ் என்பவனிடம் 3 லட்சம் பணம் கொடுத்து அனுப்பியுள்ளார். பணத்தை கொண்டுவந்து தந்ததும், "அவன் வருவான், நீ போ' என அனுப்பியுள்ளார்கள். சந்தேகமான ஐயப்பன் மனைவி, புதுச்சேரி போலீஸில் புகார் தந்துள்ளார். போலீஸ் அதை சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை. பணத்தை வாங்கிக்கொண்ட முத்துக்குமார் டீம், ஐயப்பனை வெட்டிக் கொலைசெய்து வீசிவிட்டு எஸ்கேப்பாகிவிட்டனர்.
இந்த வழக்கில் புதுச்சேரி, விழுப்புரத்தை சேர்ந்த 10 பேர் கொண்ட குற்றவாளிகள் டீமை எஸ்.பி. சுதாகர் அமைத்த தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர். பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு தான் இந்த கொலைக்கு காரணம் என்கிறது போலீஸ். "அது மட்டுமா காரணம்?'' என ரவுடிகளைக் கண்காணிக்கும் ஓ.சி.ஐ.யூ. பிரிவு அதிகாரிகளிடம் கேட்டபோது, "வேட்டவலம், தச்சம்பட்டு, வெறையூர், வேலையம்பாக்கம் பகுதிகளில் தென்பெண்ணையாற்றின் கரையோரம், மாந்தோப்புகளில் சீட்டாட்டம் நடத்துகின்றனர். லட்சக்கணக்கில் பெட் வைத்து நடக்கும் இதில், பெங்களூரு, புதுச்சேரி, சென்னை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி பகுதிகளிலிருந்து பலர் வந்து கலந்து கொள்கின்றனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/tmalai-murder1.jpg)
இவர்களுக்கு தேவையான மது, மாது அனைத்தையும் இந்த ரவுடிகள் தான் சப்ளை செய்கிறார்கள். சீட்டாடுபவர்களுக்கு திடீரென பணத்தேவை ஏற்பட்டால் லட்சங்களில் மீட்டர் வட்டிக்கு பணம் தந்து வசூலிப்பான் ரவுடி முத்துக்குமார். அவனைப் போலவே அவனது நண்பன் ஐயப்பனும் இங்குவந்து செய்துவந்தான். இதனை கண்டுகொள்ளாமலிருக்க, நல்லான்பிள்ளைபெற்றாள், வேட்டவலம், கீழ்பென்னாத்தூர் காவல்நிலைய போலீஸாருக்கு மாமூல் தரப்பட்டுள்ளது. வெளிமாவட்ட, வெளிமாநில ரவுடிகள் நடமாட்டம் வேட்டவலம் பகுதிகளில் அதிகமானது தெரிந்து எச்சரிக்கை செய்யப்பட்டது. அதில் வேட்டவலத்தில் தங்கியிருந்த புதுச்சேரி ரவுடி முத்துக்குமாரை மட்டும் வேட்டவலத்தை விட்டு அனுப்பிட்டாங்க, ஐயப்பன் இதே பகுதியில் தான் தங்கியிருந்து தொழில் செய்துவந்தான். போலீஸ் ஐயப்பனை கண்டுகொள்ளவில்லை. இது 3 லட்ச ரூபாய் பணத்துக்காக மட்டும் நடந்ததாகத் தெரியவில்லை. புதுச்சேரி மதுவை தமிழ்நாட்டுக்குள் கடத்திவந்து விற்பனை செய்வதும், விபச்சாரத்துக்கு பெண்களை இறக்கியதும் இதில் உள்ளது'' என்கிறார்கள்.
சில ஆண்டுகளுக்கு முன்பு புதுச்சேரி, விழுப்புரத்தில் பிரபலமாக இருந்த ரவுடிகள் திருவண்ணாமலை பகுதியில் தங்கியிருந்ததை போலீஸ் கண்டுகொள்ளாமல் விட்டிருந்தனர். அவர்கள் படுகொலை செய்யப்பட்டபின்பே போலீசுக்கு தெரியவந்தது. இந்த ரவுடிகள் இங்கே தங்கியிருப்பது தெரிந்தும் கண்டுகொள்ளாமல் விட்டதாலேயே இங்கே இந்த படுகொலை நடந்துள்ளது.
காவல்துறையின் அலட்சியத்தால் திருவண்ணாமலையும், அதனை சுற்றியுள்ள கிராமங்களும் ரவுடிகளின் கூடாரமாக மாறுகிறதா என்கிற சந்தேகம் பொது மக்களிடையே உருவாகியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/02 Raja.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2025-03/tmalai-murder-t.jpg)