கடலூர் மாவட்டம், நெய்வேலியில் என்.எல்.சி இந்தியா நிறுவனம் உள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தமிழ்நாடு மட்டுமின்றி புதுச்சேரி, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.
இந்த நிறுவனத்தில் பணியாற்றி உயிரிழந்த தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு வேலை கேட்டு அவர்களது குடும்பத்தினர் பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று என்.எல்.சி தலைமை அலுவலகம் முன்பு என்.எல்.சி நிறுவனத்தில் பணியின்போது இறந்த தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு வேலை வாய்ப்பு வழங்கக் கோரி அவர்கள் குடும்பத்தோடு பிச்சை எடுப்பதுபோல், காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
என்.எல்.சியில் உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு வேலை கேட்போர் கூட்டமைப்பு நிர்வாகி பாலமுருகன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் என்.எல்.சி நிறுவனத்தில் பணியாற்றி இறந்தவர்களின் குடும்பத்தினர் குழந்தைகளோடு கலந்து கொண்டு தங்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கக் கோரி முழக்கங்கள் எழுப்பி போராட்டம் நடத்தினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த நெய்வேலி டவுன்ஷிப் இன்ஸ்பெக்டர் சாகுல் அமீது தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனைத் தொடர்ந்து போலீசாரின் ஏற்பாட்டின் பேரில் என்.எல்.சி தலைமை அலுவலகத்தில் செயல் இயக்குநர் சதீஷ்பாபுவுடன் பணியின்போது இறந்த தொழிலாளர்களின் வாரிசுகள் கூட்டமைப்பு நிர்வாகிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தங்களுக்கு என்.எல்.சியில் நிரந்தர வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதற்கு செயல் இயக்குநர் சதீஷ்பாபு, 'உங்களது கோரிக்கைகள் குறித்து என்.எல்.சி நிறுவன தலைவர் மற்றும் உயரதிகாரிகளிடம் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார். அதனை ஏற்று என்.எல்.சி நிறுவனத்தில் பணியின்போது இறந்த தொழிலாளர்களின் வாரிசுகள் கூட்டமைப்பினர் தங்களது போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.