புதுச்சேரியில் தற்போது நாளுக்கு நாள் கரோனா நோய் தொற்று அதிகரித்துவருகின்றது. இதேபோன்று தினந்தோறும் உயிரிழப்புகளும் அதிகரித்துவருகின்றன. இதனை கண்டிக்கும் வகையில், கரோனா காலத்தில் மக்களின் உயிர் பற்றி சிந்திக்காமல் தினந்தோறும் அதிகரித்து வரும் உயிர் பலியை குறைக்க நடவடிக்கை எடுக்காத மாநில அரசை கண்டித்தும், துணைநிலை ஆளுநர், முதலமைச்சர் இடையே நடைபெறும் அதிகார போக்கால் குறைந்துள்ள மாநில அரசின் வளர்ச்சியை கண்டித்தும், மாநில அரசிற்கு நிதியை வழங்காத மத்திய அரசை கண்டித்தும், புதுச்சேரி சுகாதாரத் துறையை கண்டித்தும் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி மாநில அமைப்பாளர் ஸ்ரீதர் தலைமையில் மூன்று பேர் தட்டாஞ்சாவடி பகுதியில் அமைந்துள்ள 200 அடி பி.எஸ்.என்.எல். டவர் மீது ஏறி போராட்டம் செய்தனர். அப்போது புதுச்சேரி அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதுகுறித்து தகவலறிந்த தன்வந்திரி போலீசார் பேச்சுவார்தை நடத்தினர். 1 மணிநேர போராட்டத்திற்கு பிறகு போலீசார் பேச்சுவார்தை நடத்தியதையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது.
இதுகுறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி புதுவை மாநில அமைப்பாளர் சி.ஸ்ரீதர் கூறுகையில், “புதுச்சேரியில் ஆட்சி செய்யும் மாநில காங்கிரஸ் கட்சி நிதிப் பற்றாக்குறைக்கு மத்திய அரசை குறை கூறுவதும், ஆளுநரை குறை கூறுவதும் வழக்கமாக கொண்டுள்ளது. முதலமைச்சர் நாராயணசாமியும், துணைநிலை ஆளுநர் கிரண்பேடியும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி நாட்களை கடத்தி வருவதைக் கண்டித்தும், கொரோனா பேரிடர் காலத்தில் மக்கள் உயிர் காக்க தவறிய மத்திய, மாநில அரசை கண்டித்தும், செல்போன் டவர் மீது ஏறி மாநில அரசை கண்டிக்கும் போராட்டம் நடத்தினோம். அரசு இதுகுறித்து நடவடிக்கை எடுக்காவிட்டால் மிக பெரிய போராட்டம் நடத்தப்படும்" என எச்சரித்தார்.