கடலூரில் தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் ஜி.கே. வாசன் கலந்துகொண்டார். முன்னதாக செய்தியாளரிடம் பேசிய வாசன், "ராமேஸ்வரம் மீனவர்கள் மீது தொடர்ந்து இலங்கை ராணுவம் தாக்குதல் நடத்துவது ஏற்புடையது அல்ல உடனே மீனவர்களை மத்திய அரசின் வெளியுறவுத் துறை காப்பாற்ற வேண்டும். மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவது மட்டுமல்லாமல் அவர்களுடைய படகுகளையும், வலைகளையும் நாசம் செய்யும் வேலையில் இலங்கை ராணுவம் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறது. இது கண்டனத்துக்குரியது.
பெட்ரோல் டீசல் உயர்வைக் குறைக்க மத்திய அரசும் மாநில அரசும் அதனுடைய வரிகளைக் குறைத்தால்தான் பெட்ரோல் விலை என்பது குறையக் கூடும்.
கர்நாடக அரசு தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவது கண்டனத்திற்குரியது. மத்திய அரசின் வழிகாட்டுதல் இன்றியும், தமிழ்நாட்டினுடைய அனுமதி இன்றியும் தன்னிச்சையாக கர்நாடக மாநிலம் மட்டுமே முடிவெடுத்து அணை கட்டுவது தவறு. தமிழகத்தைப் புறந்தள்ளி தண்ணீர் விடாமல் தடுப்பது, தண்ணீர் தர மறுப்பது, ஒருபோதும் ஏற்புடையது அல்ல. இந்நிலை இன்றும் தொடர்கிறது. தற்போது தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கான ஏற்பாட்டினையும் கர்நாடகம் செய்கிறது. தடுப்பணை கட்டினால் நீர்வரத்து குறைந்துவிடும். இதனால் கடலூர், விழுப்புரம், வேலூர் உட்பட 6 மாவட்டங்கள் பாதிக்கப்படும். தமிழ்நாட்டினுடைய நீர்நிலைகள் மீதான உரிமைகளை நிலைநாட்ட மத்திய அரசும் நீர்நிலை மேலாண்மையை வலியுறுத்த வேண்டும்" என்றார்.