Skip to main content

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு

Published on 04/12/2018 | Edited on 04/12/2018
sterlite protest



தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மே மாதம் 22ந் தேதி மக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது ஏற்பட்ட துப்பாக்கி சூடு மற்றும் தொடர் போராட்டங்களில் 13 பேர் பலியானார்கள். 
 

இதைத் தொடர்ந்து கடந்த மே மாதம் 28ந் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்பேரில் ஆலை மூடி சீல் வைக்கப்பட்டது. இதனை எதிர்த்து ஆலை தரப்பில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. 
 

இந்த வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்காக ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழுவை அமைத்தது. இந்த குழுவினர் கடந்த செப்டம்பர் மாதம் 22, 23ந் தேதிகளில் தூத்துக்குடிக்கு வந்து ஆய்வு செய்தனர். பொதுமக்களிடம் இருந்தும் மனுக்களை பெற்றனர். பின்னர் சென்னையிலும் ஸ்டெர்லைட் தொடர்பாக பல்வேறு தரப்பினரையும் சந்தித்து மனுக்கள் பெற்றனர்.
 


இதைத் தொடர்ந்து  அந்த குழுவினர் அறிக்கையை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை செயல்பட அனுமதி தரலாம், ஆலையை மூடியது நீதிக்கு எதிரானது என கடந்த 28ந் தேதி  தெரிவிக்கப்பட்டு உள்ளது

.

இந்த நிலையில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு குழுவினர்  ஆலையை நிரந்தரமாக மூடும் வகையில் சட்ட மன்றத்தை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன்  தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 

இதில் எதிர்ப்பு குழுவினர் கிருஷ்ணமூர்த்தி அரிராகவன் உள்ளிட்டோர் மற்றும் குமரெட்டியாபுரம் பண்டாரம்பட்டி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 400 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
 

ஆலையை மூடுவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தருண் அகர்வால்  தலைமையிலான குழுவினர் ஆலைக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் கூறி முழக்கங்களை எழுப்பினர் பின்னர் அவர்கள் ஆட்சியர் பொறுப்பு வீரப்பனிடம் மனுக்களை அளித்தனர் ஆட்சியர் (பொ) இவை அனைத்தும் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று தெரிவித்துள்ளார்.

 

sterlite protest


எதிர்ப்பாளர்கள் போராட்டத்தையொட்டி காவல்துறை கண்காணிப்பாளர் முரளிரம்பா தலைமையில் 300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தீவிர சோதனைக்கு பிறகே ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் பொதுமக்கள் அலுவலகத்திற்குள் அனுமதிக்கபட்டனர்

இது குறித்து போராட்ட குழுவை சேர்ந்தவர்கள் கூறுகையில், மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் மக்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக நினைத்தால் உடனடியாக சட்டமன்றத்தை கூட்டி சிறப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டும். அதனை விடுத்து ஆலைக்கு ஆதரவாக நாடகமாட கூடாது. தற்போது நடந்து வரும் சம்பவங்கள் ஆலை மீண்டும் திறக்கப்பட்டு விடுமோ என்ற அச்சத்தை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது. அவ்வாறு ஆலை திறகப்படுமானால் தூத்துக்குடி மக்கள் வாழவே முடியாத நகரமாகிவிடும். ஆலையை திறக்க விட மாட்டோம். இதற்காக தூத்துக்குடி மாவட்ட மக்கள் பிரதிநிதிகளையும் சந்திக்க திட்டமிட்டுள்ளோம் மாவட்டம் மட்டுமல்லாது போராட்டத்தை மாநில அளவில் விரிவு படுத்துவோம் என்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமராக்கள் செயலிழப்பு குறித்து நீலகிரி ஆட்சியர் விளக்கம்!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Nilgiris Collector Explains Strong Room CCTV Cameras Malfunction

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளது.

இத்தகைய சூழலில் தான் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. நீலகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அருகிலுள்ள அறையிலிருந்து கண்காணிப்பதற்காக அனைத்து அரசியல் கட்சியினருக்கும் பொதுவாக ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று (27.04.2024) மாலை திடீரென 173 சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தது. பின்னர் சுமார்  20 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் சிசிடிவி கேமராக்கள் வழக்கம் போல் செயல்பட தொடங்கின. 

Nilgiris Collector Explains Strong Room CCTV Cameras Malfunction

இந்நிலையில் வாக்கு இயந்திரம் வைக்கப்பட்ட அறையில் சிசிடிவி செயலிழந்தது குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியரும், நீலகிரி மக்களவைத் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலருமான அருணா செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்தார். அப்போது, “ வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் அதிக வெப்பம் மற்றும் காற்றோட்டம் இல்லாத காரணத்தினால் நேற்று (27.04.2024) மாலை 6.17 முதல் 6.43 வரை 20 நிமிடங்களுக்கு 173 கண்காணிப்பு கேமராக்களும் செயல் இழந்துவிட்டன. அந்தக் குறிப்பிட்ட 20 நிமிடங்களுக்கு எந்தவித கண்காணிப்பு கேமரா பதிவுகளும் இல்லை.

அதாவது அதிக வெப்பத்தால் ஷார்ட் சர்கியூட் ஏற்பட்டு சிசிடிவி கேமராவில் செயலிழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் எந்தவித முறைகேடும் நடக்க வாய்ப்பில்லை. வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக உள்ளன. அதில் எந்த சந்தேகமும் தேவையில்லை. மேலும் இது குறித்து சந்தேகம் இருந்தால் கட்சியினரை அழைத்துச் சென்று காட்ட தயாராக இருக்கிறோம். மத்திய பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட 3 கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு குறைபாடுக்கு 200 சதவீதம் வாய்ப்பு இல்லை. எதிர்காலத்தில் இதுபோல் எந்தப் பிரச்சனைகளும் ஏற்படாமல் இருக்க தேவையான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். நீலகிரி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் ஆ.ராசாவும், அதிமுக சார்பில் லோகேஷ் தமிழ்ச்செல்வனும், பாஜக சார்பில் மத்திய இணையமைச்சர் எல்.முருகனும், நாம் தமிழர் கட்சி சார்பாக ஜெயக்குமாரும் போட்டியில் உள்ளது குறிப்பிடத்தகது. 

Next Story

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு; அதிகாரிகளுக்கு நீதிமன்றம் கெடு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
The court is bad for the authorities for Tuticorin firing

தூத்துக்குடியில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டம் நடைபெற்றது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையம் 18-5-2022 அன்று அளித்த அறிக்கையின்மீது, தமிழக அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டன. மேலும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விபரங்கள் தமிழக அரசால் வெளியிடப்பட்டது. இதற்கிடையே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து எடுத்து விசாரித்த வழக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தால் முடித்து வைக்கப்பட்டதை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதனையடுத்து, இந்த வழக்கு கடந்த மார்ச் 23 விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், “இது குறித்த அறிக்கை தயாராகிவிட்டதால் அடுத்த விசாரணையின் போது சமர்ப்பிக்கப்படும்” எனப் பதில் அளிக்கப்பட்டது. இதனையடுத்து தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கை குறித்த விவரங்களை மனுதாரருக்கு அறிக்கையாக தர தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணையை ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்த நிலையில், நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் கூறியதாவது, ‘வழக்கில் எதிர் மனுதாரர்களாகச் சேர்க்கப்பட்ட சில அதிகாரிகளுக்கு நீதிமன்ற நோட்டீஸ் சென்றடையவில்லை’ எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்ட அதிகாரிகள் அனைவரும் ஜூன் 7ஆம் தேதிக்குள் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கு விசாரணையை ஜூன் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.