
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை எதிர்கொள்ளும் வகையில் அரசியல் கட்சிகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக திமுகவில் ஒருங்கிணைப்புக்குழு அமைக்கப்பட்டு அதற்கான பணிகள் இந்த குழு மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்தகைய சூழலில் தான் திமுகவில் கட்சி ரீதியாகச் செயல்பட்டு வரும் மாவட்டங்களுக்குக் கடந்த மாதம் மாவட்ட பொறுப்பாளர்களை நியமித்து அக்கட்சியின் சார்பில் அறிவிப்பு வெளியாகியிருந்தது.
அந்த வகையில் தர்மபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளராகப் பதவி வகித்து வந்த தடங்கம் சுப்பிரமணியத்தை அப்பதவியில் இருந்து நீக்கி திமுக பொதுச் செயலாளரும், தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தார். அதே உத்தரவில் தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளராகத் தர்ம செல்வன் நியமிக்கப்பட்டார். இத்தகைய சூழலில் தான் தர்ம செல்வன் பேசியதாகக் கூறப்படும் ஆடியோ ஒன்று சமூக வலைத் தளங்களில் பகிரப்பட்டது. அதில், “நான் சொன்னதைக் கேட்கவில்லை என்றால் அந்த அதிகாரி இருக்க மாட்டார் (ஒருமையில் குறிப்பிடுகிறார்).
இதில் யாரும் தலையிட முடியாது. நீங்கள் நினைக்கும் ஆட்களைச் சொல்லி மாற்ற முடியாது. நான் லெட்டர் வைத்தால்தான் மாற்ற முடியும். அதனை நீங்கள் உணர வேண்டும். கலெக்டர், எஸ்.பி. என அரசு அதிகாரிகள் வரை அனைவரும் நான் சொல்வதைத்தான் கேட்க வேண்டும். கேட்கவில்லை என்றால் அதிகாரிகள் இருக்கமாட்டார்கள். யாரும் கேம் விளையாட இங்கு இடமில்லை. மீறி கேம் விளையாடினால் கதை முடிந்துவிடும்” என பேசியிருந்தார். அதே சமயம் தர்ம செல்வனின் பேச்சுக்கு அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களும் தங்களது கடும் கண்டனத்தைத் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் தர்மபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளார் பதவியில் இருந்து தர்ம செல்வன் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக கடந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தர்மபுரி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மணி எம்.பி. தர்மபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளாராக நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக திமுகவின் தலைமைக் கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “தர்மபுரி கிழக்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட பி. தர்மசெல்வனை அப்பொறுப்பிலிருந்து விடுவித்து, அவருக்குப் பதிலாக ஆ. மணி எம்.பி.யை தர்மபுரி கிழக்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.