Skip to main content

சுட்டெரிக்கும் வெயிலிலும் போராட்டம் 

Published on 06/04/2018 | Edited on 06/04/2018


 


திமுக, மதிமுக, கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி, முஸ்லீம் லீக், காங்கிஸ், தமுமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் அறிவித்த போராட்டம் ஏப்ரல் 5ஆம் தேதி மறியல், ரயில் மறியல் என தீப்பிடித்ததுபோல பரவியது. விழுப்புரத்தில் திமுக மாவட்டச் செயலாளர் பொன்முடி தலைமையில் ஆயிரக்கணக்கானவர்கள் மறியல் செய்து கைதானார்கள். வடக்கு மாவட்ட செயலாளர் மஸ்தான் தலைமையில் ஆயிரம் பேர் மறியல் செய்து கைதானார்கள். சுட்டெரிக்கும் வெயிலிலும் போராட்ட களம் கொதிப்பதாகவே இருந்தது. 
 

உளுந்தூர்பேட்டையில் மறியல் செய்த 200 பேரை காவல்நிலையத்தில் சிறை வைத்தது போலீஸ். அவர்களை வெளியேவிடச்சொல்லி ஒன்றிய செயலாளர் வைத்தியநாதன் தலைமையில் 200க்கும் மேற்பட்டவர்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர். பல பஸ்களில் டயர்களை காற்று பிடிங்கிவிடப்பட்டன. இருசக்கர வாகனங்களை தவிர தேசிய நெடுஞ்சாலை வெறிச்சோடி காணப்பட்டன.
 

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் போராட்டத்தையடுத்து உளுந்தூர்பேட்டை டோல்கேட்டை திறந்து விட்டுவிட்டனர். யாரிடமும் பணம் வசூலிக்கவில்லை. அந்த பயம் இருக்கணும் என்றார்கள் போராட்டக்காரர்கள். 
 

சின்னசேலம் அருகே பஸ்கள் கண்ணாடிகளை உடைத்ததாக 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களை விடுவிக்க கோரி தெற்கு மாவட்டச் செயலாளர் அங்கயற்கண்ணி எம்எல்ஏ உதயசூரியன், கள்ளக்குறிச்சி நான்குமுறை சந்திப்பில் மறியல் போராட்டம் நடத்தினர். 
 

அப்போது செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்களை, பஸ் கண்ணாடியை உடைத்தவர்களை அடையாளம் காட்டுமாறு போலீசார் கூறியுள்ளனர். அதற்கு நாங்கள் எப்படி அடையாளம் காட்ட முடியும், குற்றவாளியை நீங்கள்தான் தேடி பிடிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். அப்போது ஒரு பத்திரிகையாளரின் செல்போனை பிடிங்கியதோடு, அவரை டிஎஸ்பி ஜோதி, இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் ஆகியோர் தியாகதுருவம் காவல்நிலையத்தில் வைத்தனர்.
 

இந்த விஷயம் செய்தியாளர்களுக்கு போக, செய்தியாளர்கள் தியாகதுருவம் காவல்நிலையத்திற்கு படையெடுத்து காரசாரமாக வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு செய்தி போக, இரவு 12 மணிக்கு அந்த பத்திரிகையாளரை வெளியே விட்டனர். காவிரிக்காக நடக்கும் போராட்டம் பற்றி செய்தி சேகரிக்க வந்தவர்களை போலீஸ் பாய்ந்து பிராண்டியுள்ளதற்கு பொதுமக்களும், அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்தனர்.

  

சார்ந்த செய்திகள்