Skip to main content

‘கவலையளிக்கக்கூடிய சம்பவங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது’ - முதல்வர் வேதனை!

Published on 18/03/2025 | Edited on 18/03/2025

 

CM mk stalin distressed number of worrying incidents continues to increase

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 3 மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் இன்று (18.03.2025) கைது செய்துள்ளனர். இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தொடர்ந்து இதுபோன்று கைது செய்யப்படுவதைத் தடுத்திட வலுவான தூதரக நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தியும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், “2025ஆம் ஆண்டின் மூன்று மாதங்களுக்குள் இலங்கைக் கடற்படையினரால் தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்படும் பத்தாவது சம்பவம் இதுவாகும் என்பதை ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து நேற்று (17.03.2025) மீன்பிடிக்கச் சென்ற மூன்று மீனவர்களை அவர்களது மீன்பிடி விசைப்படகுடன் இன்று இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். பாரம்பரிய மீன்பிடிப் பகுதியில் நமது மீனவர்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்க வலுவான தூதரக முயற்சிகள் தேவை என்று பலமுறை தான் வலியுறுத்திக் கேட்டுக் கொண்ட போதிலும், இதுபோன்ற கவலையளிக்கக்கூடிய சம்பவங்களின் எண்ணிக்கை தொய்வின்றி தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கு மீன்பிடித் தொழியையே பெரிதும் நம்பியுள்ளனர். இருப்பினும் இலங்கைக் கடற்படையினரால் அடிக்கடி இது போன்று சிறைபிடிக்கப்படுவதால், அவர்களது குடும்பத்தினர் வறுமையின் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். எனவே, தமிழ்நாட்டு மீனவர்கள் மேலும் கைது செய்யப்படாமல் தடுக்கவும், இலங்கை சிறைக் காவலில் வைக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 110 மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவிக்க வலுவான தூதரக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்