Skip to main content

‘சாதி உள்நோக்கத்துடன் சதிசெய்து திட்டமிட்டு..’-கச்சநத்தம் மூவர் கொலை வழக்கில் ஜாமின் மனு தள்ளுபடி!

Published on 26/10/2019 | Edited on 26/10/2019

2018, மே 28-ஆம் தேதி சிவகங்கை மாவட்டம் – கச்சநத்தம் கிராமத்தில் நடந்த ஜாதி மோதலில், பட்டியலினத்தைச் சேர்ந்த மூவர் கொல்லப்பட்டனர். ஐவர் படுகாயம் அடைந்தனர். இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்ட கருப்புராஜா என்ற முண்டியாண்டிசாமி, இளையராஜா, கனீத் என்ற கனீத்குமார், அக்னி என்ற அக்னிராஜ், ஒட்டகுலத்தான் என்ற கந்தசாமி, ராமகிருஷ்ணன், மாயசாமி, கருப்பையா, செல்வி ஆகிய 9 பேர் தாக்கல் செய்த ஜாமின் மனு ஏற்கனவே சிறப்பு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் மேல்முறையீடு செய்தனர். 
 

moovar kolai

 

 

அந்த மனுவில் ‘கச்சநத்தம் சாதிய மோதல் வழக்கு தொடர்பாக ஓராண்டுக்கும் மேலாக சிறையில் இருக்கிறோம். வழக்கின் விசாரணை முடிந்து, குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டு விட்டது. இனியும் எங்களை நீதிமன்ற காவலில் வைத்திருக்க வேண்டியதில்லை. எனவே, எங்களுக்கு ஜாமின் வழங்கி உத்தரவிடவேண்டும்.’ என்று குறிப்பிட்டிருந்தனர். 

ஆறுமுகம், சண்முகநாதன், சந்திரசேகர் ஆகிய மூவர் கச்சநத்தத்தில் கொல்லப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. எஸ்.சி.எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச்சட்டம் மற்றும் பொதுச்சொத்துக்களை சேதப்படுத்துவதைத் தடுக்கும் சட்டத்தின் கீழ் கைதான மேற்கண்ட 9 பேரும் ஜாமின் கோரிய வழக்கு நீதிபதி பார்த்திபன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் ‘மூன்று பேர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளனர். ஐந்து பேர் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தால் இன்றுவரையிலும் அந்தப் பகுதி ஒருவித பதட்டத்துனேயே காணப்படுகிறது. தற்போது கீழமை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடங்கியுள்ளதால், கூடுதலாகப் பலரையும் விசாரிக்க வேண்டியுள்ளது. இந்த நிலையில் அவர்களுக்கு ஜாமின் வழங்கினால் விசாரணை பாதிக்கப்படும்.’ என்று தெரிவித்தார். 

இவ்வழக்கின் புகார்தாரர் மகேஸ்வரன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பகத்சிங்கும் ‘வழக்கை தினமும் விசாரிக்க வேண்டுமென்று உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டே உத்தரவிட்டது. இருப்பினும், குற்றவாளிகள் சம்மன் பெறாமல், ஆஜராகாமல் இருப்பது போன்ற நடவடிக்கைகள் விசாரணையைத் தாமதப்படுத்தி வருகின்றன. எனவே, அவர்களுக்கு ஜாமின் வழங்கக்கூடாது.’ என்று வாதிட்டார். 
 

madurai

 

 

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி பார்த்திபன் ‘இது ஒரு அரிய வழக்கு. இவ்வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஜாமின் வழங்க முடியாது. சாதி உள்நோக்கத்துடன் முன்கூட்டியே சதிசெய்து திட்டமிட்டு நடைபெற்ற குற்றச்சம்பவம் இது. ஒட்டுமொத்த பாதிப்பை கவனத்தில் கொள்ள வேண்டும். மூன்று பேரின் உயிரிழப்பு, ஐந்து பேரின் படுகாயங்கள் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு, இந்த வழக்கில் இவர்களுக்கு ஜாமின் வழங்க முடியாது.' என்று மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். 
 


 

சார்ந்த செய்திகள்